ஓ.என்.ஜி.சி.க்கு எதிரான போராட்டத்தில் திருமாவளவன் கைது: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்


ஓ.என்.ஜி.சி.க்கு எதிரான போராட்டத்தில் திருமாவளவன் கைது: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 27 March 2018 11:00 PM GMT (Updated: 27 March 2018 5:50 PM GMT)

ஓ.என்.ஜி.சி.க்கு எதிரான போராட்டத்தில் திருமாவளவன் கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மெலட்டூர்,

தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டையில் நேற்று ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தின்போது திருமாவளவன் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.

இதை கண்டித்து மெலட்டூர் அருகே உள்ள இடையிருப்பு பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 பாபநாசம்–சாலியமங்கலம் சாலையில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வடக்கு ஒன்றிய செயலாளர் கார்த்தி தலைமை தாங்கினார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மறியல் போராட்டம் நடைபெற்ற இடத்துக்கு விரைந்து சென்று, விடுதலை சிறுத்தைகள் கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து கட்சியினர் சாலை மறியலை கைவிட்டனர். மறியல் காரணமாக அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருக்கருகாவூர்


இதேபோல திருக்கருகாவூரிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சாலை மறியல் உடனடியாக கைவிடப்பட்டது.

Next Story