ஓ.என்.ஜி.சி. பணிகளை நிறுத்தக்கோரி 39 கிராம மக்கள் முற்றுகை போராட்டம் 800 பேர் கைது


ஓ.என்.ஜி.சி. பணிகளை நிறுத்தக்கோரி 39 கிராம மக்கள் முற்றுகை போராட்டம் 800 பேர் கைது
x
தினத்தந்தி 28 March 2018 4:45 AM IST (Updated: 28 March 2018 12:08 AM IST)
t-max-icont-min-icon

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து ஓ.என்.ஜி.சி. பணிகளை நிறுத்தக்கோரி 39 கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட திருமாவளவன், பாலகிருஷ்ணன் உள்பட 800 பேரை போலீசார் கைது செய்தனர்.

அம்மாப்பேட்டை,

காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம், ஷேல் எரிவாயு திட்டம் போன்ற திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தக்கூடாது என்பதை வலியுறுத்தி பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் ஆங்காங்கே போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை, ஒரத்தநாடு பகுதிகளில் 39 இடங்களில் ஆழ்குழாய் கிணறு அமைத்து எரிவாயு எடுக்க ஓ.என்.ஜி.சி. நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதற்காக அம்மாப்பேட்டை அருகே தீபாம்பாள்புரம், மருவத்தூர் ஆகிய இடங்களில் ஆழ்குழாய் கிணறு அமைப்பதற்கான முதல் கட்ட பணியை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தொடங்கியுள்ளது. இதனால் விவசாய நிலங்கள் எல்லாம் பாலைவனமாகி விடும் என்று கருதி கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல் படுத்த ஆழ்குழாய் கிணறு அமைக்கும் ஓ.என்.ஜி.சி. பணியை நிறுத்தக்கோரியும், இந்த பணியை செயல்படுத்த கொண்டு வரப்பட்டுள்ள எந்திரங்களை அப்புறப்படுத்தக்கோரியும், காவிரி பாசன பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்கக்கோரியும், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழுவை அமைக்க வலியுறுத்தியும் பல்வேறு அமைப்புகள் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி நேற்று காலை அம்மாப்பேட்டை புதிய பஸ் நிலையம் முன்பு விவசாயிகள், கிராம மக்கள் என ஏராளமானோர் ஒன்று திரண்டு ஓ.என்.ஜி.சி.க்கு எதிராகவும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, தாளாண்மை உழவர் இயக்க தலைவர் திருநாவுக்கரசு, காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன், விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் முருகேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் நீலமேகம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சாமி.நடராஜன் மற்றும் பல்வேறு கட்சியினர், 39 கிராமங்களை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் இவர்கள் அனைவரும் முற்றுகை போராட்டம் நடத்துவதற்காக தாரை, தப்பட்டை முழங்க அம்மாப்பேட்டை அருகே உள்ள தீபாம்பாள்புரம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர். இவர்கள் யாரும் ஓ.என். ஜி.சி. பணி நடைபெறும் பகுதிக்குள் நுழைந்துவிடக் கூடாது என்பதற்காக இரும்பு கம்பிகளால் ஆன தடுப்புகளால் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

போலீஸ் சூப்பிரண்டுகள் செந்தில்குமார்(தஞ்சை), மயில்வாகனன்(திருவாரூர்) ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். ஊர்வலமாக வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். திருமாவளவன், வேல் முருகன், பாலகிருஷ்ணன், மணியரசன், ஜவாஹிருல்லா உள்பட மொத்தம் 800 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். போராட்டத்தில் கைதானவர்களை அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் நேரில் சந்தித்து பேசி அவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.

Next Story