மின் திட்ட கேபிள்களை பூமிக்கு அடியில் கொண்டு செல்ல வலியுறுத்தி விவசாயிகள் மாநாடு


மின் திட்ட கேபிள்களை பூமிக்கு அடியில் கொண்டு செல்ல வலியுறுத்தி விவசாயிகள் மாநாடு
x
தினத்தந்தி 28 March 2018 5:15 AM IST (Updated: 28 March 2018 12:43 AM IST)
t-max-icont-min-icon

மின் திட்ட கேபிள்களை பூமிக்கு அடியில் கொண்டு செல்ல வலியுறுத்தி விவசாயிகள் மாநாடு நடத்த ஆலோசனைக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

திருப்பூர், 

மின் திட்டங்களுக்கான கேபிள்களை பூமிக்கு அடியில் கொண்டு செல்ல வலியுறுத்தி விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் சார்பில் மாநாடு நடத்த ஆலோசனைக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

விவசாய நிலங்கள் வழியாக உயர் மின் அழுத்த கோபுரங்களை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் சார்பில் நேற்று காலை திருப்பூர்-காங்கேயம் ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில தலைவர் கொங்கு ராஜாமணி தலைமை தாங்கினார்.

கொங்குநாடு விவசாயிகள் கட்சி தலைவர் முருகேசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம், ம.தி.மு.க. முன்னாள் எம்.பி. கணேசமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் பொன்னுசாமி, ஏர்முனை இளைஞர் அணி மாநில துணை செயலாளர் சுரேஷ், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஈஸ்வரன், உழவர் உழைப்பாளர் கட்சி ஒன்றிய செயலாளர் ஈஸ்வரன், தமிழக விவசாயிகள் சங்க சட்ட ஆலோசகர் வக்கீல் ஈசன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினார்கள்.

கூட்டத்தில், பவர்கிரிட் நிறுவனமும், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகமும் பல்வேறு உயர்மின் அழுத்த மின்பாதை திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைக்க திட்டமிட்டுள்ளது. இதுபோல் 45-க்கும் மேற்பட்ட திட்டங்கள் மத்திய, மாநில மின்வாரியங்கள் மூலமாக செயல்படுத்தப்பட உள்ளன. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன் இழப்பீட்டு தொகையும் முறையாக கிடைப்பதில்லை. இவ்வாறு உயர்மின் கோபுரங்கள் மூலம் மின்சாரம் கொண்டு செல்லும்போதும் மின் இழப்பு ஏற்படும். சாலையோரம் பூமிக்கு அடியில் கேபிள் மூலமாக மின்சாரத்தை கொண்டு சென்றால் எந்த வித மின்இழப்பும் ஏற்படாது. விவசாயிகளும் பாதிக்கப்பட மாட்டார்கள்.

கேரள மாநிலத்தில் 40 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலையோரமாக மின்சார கேபிள் கொண்டு செல்லப்படுகிறது. சென்னை, சேலம், கோவை, மதுரை, திருச்சி போன்ற மாநகரங்களிலும் ஏற்கனவே உயர்மின் அழுத்த கேபிள்கள் சாலையோரமாக பதிக்கப்பட்டுள்ளன. கடலோர மாவட்டங்களிலும் பூமிக்கு அடியில் கேபிள்களாக மாற்ற திட்டமிட்டு செயலாற்றி வருகின்றனர்.

மத்திய, மாநில நெடுஞ்சாலைகளின் ஓரமாக மேற்கண்ட அனைத்து மின் திட்டங்களுக்கான கேபிள்களை பூமிக்கு அடியில் பதித்து எடுத்துச்செல்ல வேண்டும். பவர்கிரிட் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகத்தை வலியுறுத்தி விவசாயிகளின் கூட்டு இயக்கங்களின் சார்பில் மக்களை திரட்டி அனைத்து அரசியல் கட்சி தலைவர்களை அழைத்து வருகிற மே மாதம் 6-ந் தேதி ஈரோட்டில் கோரிக்கை விளக்க மாநாடு நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Next Story