கடலூர் முதுநகரில் லாரி மோதி விபத்து கப்பல் என்ஜினீயர் பலி- 9 பேர் படுகாயம்
கடலூர் முதுநகரில் லாரி மோதி விபத்தில் கப்பல் என்ஜினீயர் ஒருவர் பலியானார் மேலும் 9 பேர் படுகாயமடைந்தனர்.
கடலூர் முதுநகர்,
கடலூர் முதுநகரில் தறிகெட்டு ஓடிய லாரி மோதிய விபத்தில் கப்பல் என்ஜினீயர் பலியானார். மேலும் 9 பேர் பலத்த காயமடைந்தனர். விபத்து ஏற்படுத்திய டிரைவரை பொது மக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
கடலூர் முதுநகர் அப்பாவுதெருவை சேர்ந்தவர் சிவலிங்கம் மகன் விமல்(வயது 32). கப்பல் என்ஜினீயரான இவர் வெளிநாட்டில் இருந்து கடந்த ஒருவாரத்துக்கு முன்பு ஊருக்கு வந்தார்.
இந்த நிலையில் விமலின் தங்கை குழந்தை நவீலனுக்கு (1½) உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து விமல் மோட்டார் சைக்கிளில் தங்கை தென்றல், அவரது குழந்தை நவீலன் ஆகியோரை கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துக் கொண்டு புறப்பட்டார்.
செல்லங்குப்பம் பஸ்நிறுத்தம் அருகே வந்தபோது, எதிரே சிமெண்டு லோடு ஏற்றி வந்த லாரி எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விமல் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீதும் மோதியது. மேலும், அந்த லாரி நிற்காமல் எதிரே வந்த கார், 2 ஆட்டோக்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இந்த விபத்தில் விமல் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது தங்கை தென்றல், மகன் நவீலன், ஷேர் ஆட்டோ டிரைவர் புதுச்சத்திரம் அருகே உள்ள வில்லியநல்லூர் நடுத்தெருவை சேர்ந்த அசோக்குமார்(23), ஆட்டோவில் பயணம் செய்த மாணவி வசந்தராயன்பாளையம் நாதன்நகரை சேர்ந்த சரண்யா (21), இன்னொரு ஆட்டோ டிரைவர் கடலூர் பீச்ரோடு வன்னியர்பாளையம் செந்தில்நகரை சேர்ந்த ராமலிங்கம்(54) மற்றும் பள்ளி ஆசிரியை ஒருவர் உள்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
உடனே அவர்களை அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்களில் தென்றல், நவீலன் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். ஆசிரியை ஒருவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற 6 பேரும் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
விபத்து காரணமாக கடலூர்-சிதம்பரம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது பற்றிய தகவல் அறிந்ததும் கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.
இதற்கிடையே விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற லாரியை கடலூர் மோகன்சிங் வீதி சந்திப்பில் பொதுமக்கள் சிறைபிடித்தனர். பின்னர் லாரி டிரைவரை கீழே இறக்கி தர்மஅடி கொடுத்து கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் நெய்வேலி இந்திராநகரை சேர்ந்த பாண்டியன்(25) என்பது தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story