ஆரணி அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் கருவி அமைத்து 6 மாதமாகியும் செயல்படாமல் உள்ளது


ஆரணி அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் கருவி அமைத்து 6 மாதமாகியும் செயல்படாமல் உள்ளது
x
தினத்தந்தி 28 March 2018 4:30 AM IST (Updated: 28 March 2018 3:31 AM IST)
t-max-icont-min-icon

ஆரணி அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் கருவி அமைத்து 6 மாதங்கள் ஆகியும் செயல்பாட்டுக்கு வரவில்லை.

ஆரணி, 

ஆரணி அரசு மருத்துவமனையில் ‘டயாலிசிஸ்’ கருவி அமைத்து 6 மாதங்கள் ஆகியும் செயல்பாட்டுக்கு வரவில்லை. இதனால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

ஆரணி தொகுதியில் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்களும், ஆரணி நகரில் உள்ள பொதுமக்களும் ஆரணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். தினமும் 1000-க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாக வந்து செல்கின்றனர். மேலும் உள்நோயாளிகளாக 200-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிறுநீரக கோளாறு ஏற்பட்டவர்கள் ரத்தம் சுத்திகரிப்புக்கான ‘டயாலிசிஸ்’ செய்ய வேண்டுமென்றால் தனியார் மருத்துவமனைகளுக்குத்தான் செல்ல வேண்டியுள்ளது. அங்கு அவர்கள் பணத்தை செலவு செய்தால்தான் ‘டயாலிசிஸ்’ செய்ய முடியும். இந்நோயால் அவதிப்படுபவர்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றனர்.

எனவே மேற்கண்ட கோளாறுகளால் அவதிப்படும் ஏழை நோயாளிகளின் முக்கியத்துவம் கருதி இலவசமாக ‘டயாலிசிஸ்’ செய்வதற்காக ஆரணி அரசு பொதுமருத்துவமனைக்கு தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஏற்பாட்டில் ‘டயாலிசிஸ்’ கருவி ஆபரேஷன் தியேட்டரில் அமைக்கப்பட்டது. இந்த கருவி ஏற்படுத்தப்பட்டு 6 மாதங்களாகியும் இதுவரையில் செயல்பாட்டிற்கு வரவில்லை. இதனால் டயாலிசிஸ் சிகிச்சைக்காக வருவோருக்கு அந்த சிகிச்சை செய்ய முடியாமல் அவர்கள் திருப்பி அனுப்பப்படும் நிலை உள்ளது.

இது தொடர்பாக மருத்துவ அதிகாரி நந்தினி கூறுகையில், “ரத்தம் சுத்திகரிப்பு செய்யும் ‘டயாலிசிஸ்’ கருவி பொருத்துவதற்கு தனியாக கட்டிட வசதியுடன் சுத்திகரிப்பு தண்ணீர் அவசியம் தேவை. அதற்கு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் தற்போதுதான் 1 டாக்டர், செவிலியர், உதவியாளர்கள் மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் பயிற்சி பெறுவதற்காக சென்றுள்ளதாகவும், பயிற்சி முடித்து வந்ததும் சுத்திகரிப்பு தண்ணீர் வசதி இருந்தால்தான் நோயாளிகளுக்கு ‘டயாலிசிஸ்’ கருவி மூலம் சிகிச்சை அளிக்க முடியும்.

மேலும் இதேபோல் ஆரணி அரசு மருத்துவமனையில் செவ்வாய்க் கிழமை, வியாழக் கிழமைகளில் நோயாளிகளுக்கு கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. தனியாக ஆபரேஷன் தியேட்டரும், தனி வார்டும் அமைத்து கொடுத்தால் கூடுதலானவர்களுக்கு ஆபரேஷன் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த மருத்துவமனையில் 14 டாக்டர்கள் இருக்க வேண்டும். ஆனால் 12 டாக்டர்களே உள்ளனர்.

ஆனால் 5 டாக்டர்கள் மாற்று மருத்துவமனைகளுக்கு பணி செய்ய செல்வதால் கொஞ்சம் சிரமமாக இருப்பதாகவும், மேலும் மருத்துவமனை பணியாளர்கள் இல்லை. இதனால் அடிபட்டு காயங்களுடன் வரும் நோயாளிகளுக்கு கட்டு கட்டவும், வீல் சேர் தள்ளவும் பணியாளர்கள் இல்லை. எனினும் முன்பு இருந்ததை விட மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது” என்றார்.

Next Story