சரியான நேரத்திற்கு எடுக்காததால் அரசு பஸ்சை வழிமறித்து கண்டக்டரை தாக்கி ரூ.6 ஆயிரம் பறிப்பு
சரியான நேரத்திற்கு எடுக்காததால் ஏற்பட்ட தகராறில் அரசு பஸ்சை வழிமறித்து கண்டக்டரை தாக்கிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
அணைக்கட்டு,
குடியாத்தம் புதிய பஸ் நிலையத்திலிருந்து சென்னைக்கு அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் இரவு சென்னைக்கு புறப்பட தயாராக இருந்த அரசு பஸ்சில் டிரைவராக நெட்டேரி கிராமத்தை சேர்ந்த சதீஷ் இருந்தார். காட்பாடியை அடுத்த தாகிரெட்டி பள்ளியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (வயது 29) கண்டக்டராக இருந்தார். அந்த பஸ் புறப்பட்டவுடன் தனியார் பஸ் புறப்பட இருந்தது.
ஆனால் சென்னை பஸ் புறப்படுவதற்கு ஒரு நிமிடம் தாமதமானது. இதனால் பஸ்சை புறப்படுவதற்கு விசில் கொடுக்கும்படி கண்டக்டர் தமிழ்ச்செல்வனிடம் தனியார் பஸ் கண்டக்டர் கூறினார். அப்போது 5 பேர் 2 மோட்டார்சைக்கிளில் வந்தனர். அவர்கள் தமிழ்ச்செல்வனை மிரட்டுவதுபோல் பேசினர். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு சில வினாடிகளில் அரசு பஸ் அங்கிருந்து புறப்பட்டது. உடனே 2 மோட்டார்சைக்கிளில் வந்த 5 பேரும் பஸ்சை பின் தொடர்ந்து வந்தனர்.
பள்ளிகொண்டா சுங்க சாவடி அருகே வந்தபோது 5 பேரும் பஸ்சை வழி மறித்தனர். பஸ் நின்றவுடன் அவர்கள் பஸ்சுக்குள் ஏறி கண்டக்டர் தமிழ்ச்செல்வனை சரமாரியாக தாக்கிவிட்டு அவர் வைத்திருந்த பணத்தை பறித்துக்கொண்டு தப்பிச்சென்று விட்டனர். இதில் அவருக்கு மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. உடனே பஸ் அங்கேயே நிறுத்தப்பட்டது. அதில் வந்த பயணிகள் வேறு பஸ்களில் ஏற்றி அனுப்பப்பட்டனர்.
பின்னர் கண்டக்டர் தமிழ்ச்செல்வன் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவர் தன்னை தாக்கிய 5 பேர் டிக்கெட்டிற்கு வசூலித்த ரூ.6 ஆயிரத்தையும் பறித்துக்கொண்டு விட்டு தப்பியதாக பள்ளிகொண்டா போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில் கண்டக்டரை தாக்கிய குடியாத்தத்தை அடுத்த ஓலக்காசியை சேர்ந்த திருமலை (வயது 25) மற்றும் 18, 19 வயதுக்குட்பட்ட 4 பேர் என மொத்தம் 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story