வளர்ச்சி பணிகளுக்கு இடையூறாக இருக்கும் ‘மந்திராலயா அதிகாரிகளை தூக்கி எறியுங்கள்’ மராட்டிய அரசுக்கு சிவசேனா வலியுறுத்தல்


வளர்ச்சி பணிகளுக்கு இடையூறாக இருக்கும் ‘மந்திராலயா அதிகாரிகளை தூக்கி எறியுங்கள்’ மராட்டிய அரசுக்கு சிவசேனா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 28 March 2018 4:15 AM IST (Updated: 28 March 2018 4:04 AM IST)
t-max-icont-min-icon

வளர்ச்சி பணிகளுக்கு இடையூறாக இருக்கும் மந்திராலயா அதிகாரிகளை எந்த பயமும் இன்றி தூக்கி எறிய வேண்டும் என்று மராட்டிய அரசை சிவசேனா வலியுறுத்தி உள்ளது.

மும்பை,

வளர்ச்சி பணிகளுக்கு இடையூறாக இருக்கும் மந்திராலயா அதிகாரிகளை எந்த பயமும் இன்றி தூக்கி எறிய வேண்டும் என்று மராட்டிய அரசை சிவசேனா வலியுறுத்தி உள்ளது.

மத்திய மந்திரி குற்றச்சாட்டு

நாக்பூரில நேற்று முன்தினம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மத்திய மந்திரி நிதின் கட்காரி, வளர்ச்சி பணிகளுக்கு இடையூறாக இருக்கும் அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்தார். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் வளர்ச்சி பணிகளில் பிற்போக்கு சிந்தனையுடன் இருப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.

முதல் -மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் நடந்த விழாவில் அவர் இவ்வாறு பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

மத்திய மந்திரி நிதின் கட்காரியின் கருத்தை மேற்கோள் காட்டி சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வில் கூறியிருப்பதாவது:-

தூக்கி எறிய வேண்டும்

வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள நிர்வாக திறன் மேம்பட வேண்டியது உள்ளது. அதிகாரிகள் சிலரால் வளர்ச்சி பணிகள் தடைபடுகிறது. அவர்கள் வளர்ச்சி பணிகளுக்கு இடையூறாக நிற்கிறார்கள். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

சிவசேனா தலைமையிலான ஆட்சி நடந்தபோது, இதுபோன்ற மந்திராலயா (தலைமை செயலகம்) அதிகாரிகளை எந்தவித பயமும் இன்றி தூக்கி எறிந்தோம். அதேபோல இப்போதும் அரசு எந்தவித பயமும் இன்றி மந்திராலயா அதிகாரிகள் யாராக இருந்தாலும், அவர்களை தூக்கி எறிய வேண்டும்.

அரசின் கடன் அதிகரிக்கிறது


மாநில அரசின் கருவூலகம் திருப்திகரமாக இல்லை. நாளுக்கு நாள் அரசின் கடன் அதிகரித்து கொண்டு செல்கிறது. வளர்ச்சி பணிகளுக்கு தேவையான பணத்தை எங்கிருந்து வாங்குவது என்று தெரியவில்லை.

நாக்பூரில் போலீஸ் பவன் அமைக்க தேவையான ரூ.89 கோடியை பெற முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் போராட வேண்டியதாயிற்று. நாக்பூர் முதல்-மந்திரியின் சொந்த மாவட்டமாகும்.

முதல்-மந்திரி ஒருவரே வெறும் ரூ.89 கோடியை பெற போராட வேண்டிய நிலை இருந்தால், மக்கள் பிரதிநிதிகளின் நிலையும், சாமானிய மக்களின் நிலையும் என்னவாக இருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story