அரக்கோணம் அருகே அன்வர்திகான்பேட்டையில் ஆமை வேகத்தில் நடைபெறும் ரெயில்வே மேம்பால பணிகள்


அரக்கோணம் அருகே அன்வர்திகான்பேட்டையில் ஆமை வேகத்தில் நடைபெறும் ரெயில்வே மேம்பால பணிகள்
x
தினத்தந்தி 28 March 2018 5:00 AM IST (Updated: 28 March 2018 4:40 AM IST)
t-max-icont-min-icon

ஆமை வேகத்தில் நடைபெறும் ரெயில்வே மேம்பால பணியினை போர்க்கால அடிப்படையில் விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அரக்கோணம், 

அரக்கோணம் அருகே அன்வர்திகான்பேட்டை ரெயில் நிலையம் உள்ளது. இதனை சுற்றி மேல்களத்தூர், அருந்ததிபாளையம், செல்வமந்தை, எலத்தூர், கீழ்களத்தூர், மானாமதுரை, மேலேரி, அரசங்குப்பம், கொல்லைமேடு, கீழ்வீதி, காட்டுப்பாக்கம், விழிதாங்கிபுரம், மகேந்திரவாடி, கோடம்பாக்கம், மின்னல், நரசிங்கபுரம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

இந்த கிராமங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வேலை சம்பந்தமாக சென்னை, வேலூர், காஞ்சீபுரம், திருத்தணி, சோளிங்கர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள், வேன், மினி வேன், மோட்டார்சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் அரக்கோணம் ரெயில் நிலையத்தை கடந்து வேலைக்கு சென்று வருகின்றனர்.

பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் வாகனங்களும் இந்த வழியாக சென்று வருகிறது. அன்வர்திகான்பேட்டை ரெயில் நிலையம் வழியாக தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள், 20-க்கும் மேற்பட்ட சரக்கு ரெயில்கள், சில மின்சார ரெயில்கள் சென்று வருகின்றன.

அன்வர்திகான்பேட்டை ரெயில் நிலையம் வழியாக தினமும் 30 நிமிடங்களுக்கு ஒரு ரெயில் சென்று வருவதால் அடிக்கடி ரெயில் நிலைய கேட்டை மூடி வைத்து உள்ளனர். கேட்டை மூடி வைப்பதால் தினமும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

நீண்ட நேரம் இவ்வாறு ரெயில்வே கேட்டைமூடி வைத்திருப்பதால் அவசர வேலைக்கு செல்பவர்கள் மேட்டார் சைக்கிளை கேட்டின் அடிப்பகுதி வழியாக நுழைத்து எடுத்து சென்று ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

அன்வர்திகான்பேட்டை அருகே மேல்களத்தூர் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பிரசவத்திற்காக செல்லும் ஆம்புலன்சுகள் கூட நீண்ட நேரம் காத்திருந்து செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. ஆகவே அன்வர்திகான்பேட்டை ரெயில் நிலைய பகுதியில் மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி அரக்கோணம் தொகுதி எம்.பி. கோ.அரி, எம்.எல்.ஏ. சு.ரவி ஆகியோர் பொதுமக்கள் சார்பில் ரெயில்வே துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.

பொதுமக்களின் அந்த கோரிக்கையை ஏற்று அன்வர்திகான்பேட்டை ரெயில் நிலையம் பகுதியில் மேம்பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. ரெயில் நிலையத்தில் தண்டவாளம் செல்லும் பகுதியில் ரெயில்வே துறை சார்பில் மேம்பாலங்கள் அமைக்கும் பணி தொடங்கி மிகவும் மெதுவாக ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.

இந்த பணிகளை வேகமாக முடிப்பதற்கு மத்திய, மாநில அரசு அதிகாரிகள் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர்.

Next Story