கோவில்பட்டியில் துணிகரம் பள்ளிக்கூட மாணவியிடம் நகை பறிப்பு 2 வாலிபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


கோவில்பட்டியில் துணிகரம் பள்ளிக்கூட மாணவியிடம் நகை பறிப்பு 2 வாலிபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 29 March 2018 2:00 AM IST (Updated: 29 March 2018 1:18 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் டியூசனுக்கு சென்ற பள்ளிக்கூட மாணவியிடம் நகை பறித்த 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவில்பட்டி,

கோவில்பட்டியில் டியூசனுக்கு சென்ற பள்ளிக்கூட மாணவியிடம் நகை பறித்த 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பள்ளிக்கூட மாணவி


கோவில்பட்டி கடலைக்கார தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் கோவில்பட்டி தாலுகா அலுவலகம், நகரசபை அலுவலகம் முன்பு மனுக்கள் எழுதி கொடுக்கும் வேலை செய்து வருகிறார். இவருடைய மகள் நர்மதா (வயது 15). இவர் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர் நேற்று காலை 6 மணி அளவில் அப்பகுதியில் டியூசனுக்காக, தனது வீட்டில் இருந்து சாலை ஓரத்தில் நடந்து சென்றார். கடலைக்கார தெருவில் நடந்து சென்றபோது, அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் 20 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் வந்தனர். அதில் ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி சென்று, திடீரென்று நர்மதாவின் கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்தார். பதறிப்போன நர்மதா கூச்சல் போட்டார்.

2 வாலிபர்களுக்கு வலைவீச்சு

அக்கம்பக்கத்தினர் திரண்டு வருவதற்குள், அந்த வாலிபர் அங்கு தயாராக நின்று கொண்டிருந்த மற்றொரு வாலிபருடன் மோட்டார் சைக்கிளில் ஏறினார். உடனே 2 வாலிபர்களும் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.

இதுகுறித்த புகாரின்பேரில், கோவில்பட்டி கிழக்கு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முத்து கிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்தார். சம்பவம் நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் அந்த வாலிபர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். டியூசனுக்கு சென்ற மாணவியிடம் நகை பறித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story