தமிழகத்தில் இருந்து திராவிட கட்சிகளை வெளியேற்ற வேண்டும் எச்.ராஜா பேட்டி


தமிழகத்தில் இருந்து திராவிட கட்சிகளை வெளியேற்ற வேண்டும் எச்.ராஜா பேட்டி
x
தினத்தந்தி 29 March 2018 4:00 AM IST (Updated: 29 March 2018 1:22 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் இருந்து திராவிட கட்சிகளை வெளியேற்ற வேண்டும் என்று திருக்கடையூரில் எச்.ராஜா தெரிவித்தார்

திருக்கடையூர்,

நாகை மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று வருகை தந்தார். அப்போது அவருக்கு, கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர், கோவிலில் உள்ள சாமி சன்னதிகளில் வழிபாடு செய்தார். தொடர்ந்து எச்.ராஜா, நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

50 ஆண்டுகளாக ஆட்சி செய்துவந்த திராவிட கட்சிகள் தமிழகத்தை சீரழித்துவிட்டன. அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. இதனால் பொதுமக்கள், தமிழகத்தில் இருந்து திராவிட கட்சிகளை வெளியேற்ற வேண்டும். காவிரிநீரை தர மறுக்கும் கர்நாடகாவில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க. கூட்டணி வைத்து கொண்டு பா.ஜனதா கட்சியை விமர்சிக்க தி.மு.க.விற்கு எந்தவித தகுதியும் இல்லை. மேலும், காவிரிநீர் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற வார்த்தை இல்லை. நதிநீர் பங்கீடு திட்டம் அமைக்க வேண்டும் என்றுதான் உள்ளது. இதில் மத்திய அரசு தலையிட்டு தமிழகத்திற்கு தேவையான காவிரிநீர் கிடைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஈரோட்டில் நடைபெற்ற தி.மு.க. மாநாட்டில் தமிழகத்துக்கு தேவையான ஆக்கபூர்வமான செயல்திட்டம் பற்றி எதுவும் பேசாமல் மத்திய அரசையே அக்கட்சியினர் விமர்சித்துள்ளனர். விவசாய குடும்பத்தில் பிறந்த நான் இன்றும் இயற்கை விவசாயத்தையே செய்து வருகிறேன். காவிரிநீர் பிரச்சினைக்காக போராடுகிறேன் என்று கூறி போராடும் அய்யாகண்ணு போன்றவர்கள் உண்மையாக போராடாமல் மத்திய அரசை விமர்சித்தும், தமிழக விவசாயிகளை ஏமாற்றியும் வருகின்றனர். இவ்வாறு செயல்படுபவர்களை தமிழக விவசாயிகள் புறக்கணிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அவருடன் பா.ஜனதா கட்சியின் பாராளுமன்ற இணை பொறுப்பாளர் அகோரம், கட்சியின் நாகை மாவட்ட பொதுச் செயலாளர் அமிர்த.விஜயகுமார், ஒன்றிய செயலாளர் பாலாஜி மற்றும் கட்சி தொண்டர்கள் பலர் இருந்தனர். 

Next Story