பால் கூட்டுறவு சங்கத்தில் தரையில் பாலை கொட்டி விவசாயிகள் போராட்டம்


பால் கூட்டுறவு சங்கத்தில் தரையில் பாலை கொட்டி விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 29 March 2018 4:30 AM IST (Updated: 29 March 2018 1:45 AM IST)
t-max-icont-min-icon

அணைக்கட்டு அருகே கூட்டுறவு சங்க தேர்தலில் 15 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதால் நேற்று 2-வது நாளாக போராட்டம் நடந்தது. அப்போது விவசாயிகள் பாலை தரையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அணைக்கட்டு,

அணைக்கட்டு அருகே உள்ள வல்லண்டராமம் கிராமத்தில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது. தற்போது கூட்டுறவு சங்க தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இச்சங்கத்திற்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. மொத்தம் 26 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அதில் 11 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு 15 பேரின் மனுக்கள் தள்ளபடி செய்யப்பட்டன. இது பற்றி சங்கத்தின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள், தேர்தலில் முறைகேடு நடப்பதாகவும், வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சரியான காரணம் தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறி நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு அணைக்கட்டு கிழக்கு ஒன்றிய தி.மு.க. அவைத்தலைவர் வெங்கடேசன் தலைமையில் சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாலை கொட்டி போராட்டம்

தொடர்ந்து நேற்று காலையிலும் கூட்டுறவு சங்க அலுவலகத்தை திறக்க விடாமல் விவசாயிகள் கொண்டு வந்த பாலை தரையில் கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி தலைமையில் அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டனர். அணைக்கட்டு தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது அவர்கள் தற்போது இருக்கும் தலைவர் 2 ஆண்டுகளாக வழங்க வேண்டிய போனஸ் வழங்கவில்லை. அதே நபர்களை மீண்டும் இவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். ஆகவே இந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டனர். அதன்பேரில் நந்தகுமார் எம்.எல்.ஏ. கலெக்டருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இதுகுறித்து புகார் தெரிவித்தார்.

கூட்டுறவு துறை உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் அனைவருடைய வேட்பு மனுக்களும் ஏற்கபட்டதாக நேற்று மாலை கூட்டுறவு சங்க அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது. 

Next Story