ராமநாதபுரம் அருகே டிரைவர் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள்தண்டனை


ராமநாதபுரம் அருகே டிரைவர் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள்தண்டனை
x
தினத்தந்தி 29 March 2018 3:30 AM IST (Updated: 29 March 2018 2:08 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் அருகே முன்விரோதம் காரணமாக டிரைவரை கொலை செய்த வழக்கில் 4 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அருகே உள்ள குமராண்டிவலசை பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவருடைய மகன் நாகராஜ் (வயது 40). டிரைவரான இவர், சரக்கு வாகனம் ஓட்டி வந்தார். இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த அங்குச்சாமி மகன்கள் முனியசாமி(36), விஜயகுமார்(30) தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 3-ந் தேதி இவர்கள் முனுசுவலசையில் நடைபெற்ற திருமணத்திற்கு சென்றுவந்தபோது மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக ஊருக்கு வந்ததும் இருதப்பினரும் மோதிக்கொண்டனர். இந்த மோதலில் முனியசாமி, அவரின் தம்பி விஜயகுமார், அங்குச்சாமி மகன் ஆனந்தன்(27), ரவி மகன் விவேக்(29), ரவிச்சந்திரன் மகன் கண்ணன் பிரேம்(22) ஆகியோர் சேர்ந்து நாகராஜை இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி கொலை செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து 5 பேரை கைதுசெய்தனர்.

இவர்களில் கண்ணன் பிரேம் என்பவர் சம்பவம் நடைபெற்றபோது சிறுவனாக இருந்ததால் அவர் மீதான வழக்கு சிறுவருக்கான நீதி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதுதவிர, மற்ற 4 பேர் மீதான வழக்கு விசாரணை ராமநாதபுரம் கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வந்தது. நீதிபதி லிங்கேசுவரன் இந்த வழக்கை விசாரித்து டிரைவர் நாகராஜை கொலை செய்த முனியசாமி, விஜயகுமார், ஆனந்தன், விவேக் ஆகிய 4 பேருக்கு ஆயுள் தண்டனையும், முனியசாமிக்கு ரூ.61,500, விஜயகுமாருக்கு ரூ.51,500, ஆனந்தன் மற்றும் விவேக் ஆகியோருக்கு தலா ரூ.16,500 அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் வெங்கடேஷ், ஜெய்சங்கர் ஆகியோர் ஆஜரானார்கள்.

Next Story