கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடு: அலுவலகத்திற்கு வேட்பாளர்கள் பூட்டு போட முயன்றதால் பரபரப்பு


கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடு: அலுவலகத்திற்கு வேட்பாளர்கள் பூட்டு போட முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 29 March 2018 3:45 AM IST (Updated: 29 March 2018 2:11 AM IST)
t-max-icont-min-icon

கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடு நடப்பதாக கூறி வேட்பாளர்கள், கூட்டுறவு சங்க அலுவலகத்துக்கு பூட்டு போட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

காரிமங்கலம்,

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் கூட்டுறவு சங்க தேர்தலுக்காக காளப்பனஅள்ளி மற்றும் பந்தாரஅள்ளியில் வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதில் பந்தாரஅள்ளியில் 53 பேரும், காளப்பனஅள்ளயில் 43 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். நேற்று முன்தினம் வேட்பு மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

அதில் காளப்பனஅள்ளியில் 32 பேரின் வேட்பு மனுக்களும், பந்தாரஅள்ளியில் 42 பேரின் வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த வேட்பாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பூட்டு போட முயற்சி

அதைத்தொடர்ந்து நேற்று காலை காளப்பனஅள்ளியில் தி.மு.க.வை சேர்ந்த இடுமன் தலைமையிலும், பந்தாரஅள்ளியில் தி.மு.க. ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் தங்கதுரை தலைமையிலும், வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட வேட்பாளர்கள் அந்தந்த கூட்டுறவு சங்க அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடு நடப்பதாக கூறி அலுவலகத்துக்கு பூட்டு போட முயற்சி செய்தனர். அங்கு விரைந்து வந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினர்.

இதனால் போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. பின்னர் அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னரே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் பந்தாரஅள்ளி, காளப்பனஅள்ளி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story