மதுரையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்ட வலியுறுத்தி உண்ணாவிரதம், வருகிற 7-ந் தேதி நடக்கிறது


மதுரையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்ட வலியுறுத்தி உண்ணாவிரதம், வருகிற 7-ந் தேதி நடக்கிறது
x

மதுரையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்ட வலியுறுத்தி எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கான மக்கள் இயக்கத்தின் சார்பில் வருகிற 7-ந் தேதி உண்ணாவிரதப்போராட்டம் நடக்க உள்ளது.

மதுரை,

மதுரையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கான மக்கள் இயக்கத்தின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடக்க உள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மதுரையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்ட வேண்டும் என்பதற்காக தனி மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டு ஒரு வருடமாக கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறது. இதற்காக மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், இல.கணேசன் எம்.பி. ஆகியோரிடம் கோரிக்கை மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்-அமைச்சரிடமும் இதற்கான கோரிக்கை மனு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டுவது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டிருந்தது. தமிழக அரசின் சுகாதாரத்துறையும் மதிப்பீடு பட்டியல் தயாரித்து கடந்த மே மாதம் மத்திய சுகாதாரத்துறைக்கு பதில் கடிதம் அனுப்பியது. அதில், மதுரையில் உள்ள அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறித்து தவறான தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளது.

எனவே, தமிழக அரசு உண்மையான தகவல்களை மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த ஜூன் மாதம் சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. மதுரையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டுவதற்கான விரிவான அறிக்கையை புத்தக வடிவில் தயாரித்து மத்திய சுகாதாரத்துறை மந்திரி நட்டாவிடமும் வழங்கப்பட்டது.

இதற்கிடையே, மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கில், கடந்த டிசம்பர் மாதம் 31-ந் தேதிக்குள் தமிழகத்தில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமையும் இடத்தை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டது. மத்திய பட்ஜெட்டில் இது குறித்து அறிவிப்பு எதுவும் வரவில்லை.

தமிழக முதல்-அமைச்சர் சட்டசபையில், செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டலாம் என்று தெரிவித்துள்ளார். ஆனால், தமிழகத்தின் 18 மாவட்டங்களை உள்ளடக்கிய மக்கள் அதிகமாக பயன்பெற மதுரையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டுவதே சிறந்தது. இதன் மூலம் சுமார் 2½ கோடி மக்கள் பயனடைவர். எனவே, மதுரையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்ட வலியுறுத்தி வருகிற 7-ந் தேதி பழங்காநத்தத்தில் உண்ணா விரத போராட்டம் நடக்க உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story