நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து வைகோ நடைபயணம்: மதுரையில் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்


நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து வைகோ நடைபயணம்: மதுரையில் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
x
தினத்தந்தி 31 March 2018 4:45 AM IST (Updated: 31 March 2018 4:36 AM IST)
t-max-icont-min-icon

நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து வைகோ தலைமையில் செல்லும் விழிப்புணர்வு நடைபயணத்தை மதுரையில் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

மதுரை,

தேனி மாவட்டம் தேவாரத்தை அடுத்த பொட்டிபுரத்தில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தை எதிர்த்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் விழிப்புணர்வு நடைபயணம் செல்கிறார். அவர் மதுரை பழங்காநத்தத்தில் இருந்து இந்த நடைபயணத்தை தொடங்குகிறார். காலை 9 மணி அளவில் நடைபயணத்தை தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், இந்திய கம்யூனிஸ்டு மாநில தலைவர் முத்தரசன், விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், பழ.நெடுமாறன் உள்பட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.

அங்கிருந்து வைகோ தலைமையிலான குழு நடைபயணத்தை தொடங்கி பைபாஸ் ரோடு, காளவாசல் சந்திப்பு, காளவாசல் மூகாம்பிகை திருமண மண்டபத்தில் மதிய உணவுக்காக தங்குகிறார்கள்.

பின்னர் அங்கிருந்து மாலையில் புறப்பட்டு தேனி மெயின்ரோடு, விராட்டிபத்து, அங்கயற்கண்ணி தோரணவாயில், அச்சம்பத்து, நான்கு வழிச்சாலை பாலம், நாகமலை புதுக்கோட்டை, கீழக்குயில்குடி பிரிவு, வெள்ளைச்சாமிநாடார் கல்லூரி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், புளியங்குளம் வழியாக செக்கானூரணி செல்கிறார்கள். அங்கு நியூட்ரினோ மையத்துக்கு எதிரான பொதுக்கூட்டம் நடக்கிறது. அன்று இரவு அங்கேயே தங்குகிறார்கள்.

நாளை காலை அங்கிருந்து புறப்பட்டு கருமாத்தூர், செல்லம்பட்டி, வாலாந்தூர், குப்பணம்பட்டி, தி.விலக்கு வழியாக உசிலம்பட்டியை அடைகின்றனர். அங்கு இரவு பொதுக்கூட்டம் நடக்கிறது. அன்றிரவு அங்கேயே தங்குகிறார்கள். நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலையில் அங்கிருந்து புறப்பட்டு தொட்டப்பநாயக்கனூர் வழியாக தேனி மாவட்டத்தை அடைகின்றனர். இந்த நடைபயணம் வருகிற 9-ந்தேதி கம்பத்தில் நிறைவடைகிறது. 

Next Story