நியூட்ரினோ எதிர்ப்பு பேரணியில் ம.தி.மு.க. பிரமுகர் தீக்குளிப்பு: வைகோ கண்ணீர் விட்டு அழுதார்


நியூட்ரினோ எதிர்ப்பு பேரணியில் ம.தி.மு.க. பிரமுகர் தீக்குளிப்பு: வைகோ கண்ணீர் விட்டு அழுதார்
x
தினத்தந்தி 1 April 2018 4:45 AM IST (Updated: 1 April 2018 2:30 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் நேற்று நடந்த நியூட்ரினோ எதிர்ப்பு பேரணியில் ம.தி.மு.க. பிரமுகர் தீக்குளித்தார். இதை அறிந்த வைகோ கண்ணீர் விட்டு அழுதார்.

மதுரை,

தேனி மாவட்டத்தில் அமைய இருக்கும் நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் இருந்து கம்பம் வரை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தனது 10 நாள் நடைப்பயணத்தை நேற்று தொடங்கினார்.

இதற்கான தொடக்க நிகழ்ச்சி, பழங்காநத்தந்தில் நேற்று நடந்தது. தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசினார். பின்னர் அவர் சென்னை செல்வதற்காக விமான நிலையம் புறப்பட்டு சென்றார்.

அதன்பின், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தலைவர்கள் ஒவ்வொருவராக பேசிக் கொண்டு இருந்தார். வைகோவும் மேடையில் அமர்ந்து இருந்தார்.

இந்த சூழ்நிலையில் கூட்டத்தில் கலந்து கொண்ட விருதுநகர் மாவட்ட ம.தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் ரவி, தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை திடீரென்று தன் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரது உடல் முழுவதும் வேகமாக தீ பரவியது.

இதைக் கண்ட அருகில் இருந்தவர்கள் சுதாரித்துக் கொண்டு தண்ணீரை அவர் மீது ஊற்றினர். மேலும் அங்கிருந்த தொண்டர் படையினர், அவர் மீது துணியை போர்த்தி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

பின்பு அவரை வாகனம் மூலம் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.

இந்த தீக்குளிப்பால் அதிர்ச்சி அடைந்த வைகோ, மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுதார்.

இதுபற்றி அவர் மேடையில் பேசுகையில், “நான் எத்தனையோ முறை தொண்டர்களிடம் கூறிவிட்டேன். யாரும் தீக்குளிக்கக் கூடாது. தீக்குளித்த ரவியை இயற்கை அன்னை காப்பாற்ற வேண்டும்“ என்று கண் கலங்கியபடியே கூறினார்.

பின்பு அவர் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்குச்சென்று, தீக்குளித்த தொண்டரை பார்த்து ஆறுதல் கூறினார்.

தீக்குளித்த ரவி (வயது 50) சிவகாசி நாடக சாலையை சேர்ந்தவர். இவருடைய தந்தை பெயர் அழகையா.

ரவிக்கு முத்துலட்சுமி (45) என்ற மனைவியும், ஜெயப்பிரகாஷ் (18), யுதீஷ்டன் (16) ஆகிய இரு மகன்களும் உள்ளனர்.

ம.தி.மு.க.வின் தீவிர தொண்டரான ரவி தற்போது மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ளார். இவர் பட்டாசு அட்டைப்பெட்டி தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார்.

Next Story