போலி நகைகளை கொடுத்து ரூ.2 லட்சம் மோசடி வடமாநில வாலிபர் கைது
காரைக்குடி பகுதியில் போலி நகைகளை கொடுத்து மோசடி செய்த வடமாநில வாலிபர் கைது செய்யப்பட்டார்.
காரைக்குடி,
குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்தவர் நிம்மியா(வயது 25). இவர் காரைக்குடி பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் தொழில் செய்துவருகிறார். நிம்மியா வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது திருவாடானையைச் சேர்ந்த கபிலன் என்பவர் அறிமுகமாகி உள்ளார். அதன்பிறகு 2 பேரும் நண்பர்களாகி உள்ளனர். இந்தநிலையில் நிம்மியா பண கஷ்டமாக உள்ளதாக கூறி தன்னிடம் இருந்த தங்க நகைகளை கொடுத்து ரூ.2 லட்சம் தருமாறு கபிலனிடம் கேட்டுள்ளார். இதனையடுத்து நகைகளை பெற்றுக்கொண்ட கபிலன் ரூ.2 லட்சத்தை நிம்மியாவிடம் கொடுத்துள்ளார். பின்னர் அந்த நகைகளை ஒரு கடையில் கொடுத்து சோதனை செய்தபோது அவை போலியானவை என்பது தெரியவந்தது. இதனையடுதது இதுகுறித்து காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்தில் கபிலன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நிம்மியாவை கைதுசெய்தனர்.