ஒட்டன்சத்திரம் அருகே, கார்-அரசு பஸ் நேருக்குநேர் மோதல்: தாய்-மகள் உள்பட 4 பேர் உடல் நசுங்கி பலி


ஒட்டன்சத்திரம் அருகே, கார்-அரசு பஸ் நேருக்குநேர் மோதல்: தாய்-மகள் உள்பட 4 பேர் உடல் நசுங்கி பலி
x
தினத்தந்தி 2 April 2018 12:49 AM IST (Updated: 2 April 2018 12:49 AM IST)
t-max-icont-min-icon

ஒட்டன்சத்திரம் அருகே கார்-அரசு பஸ் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் மதுரையை சேர்ந்த தாய்-மகள் உள்பட 4 பேர் உடல் நசுங்கி பலியாகினர்.

கன்னிவாடி,

மதுரை சின்னசொக்கிகுளம் ஜவகர் சாலையை சேர்ந்தவர் விஜயராமன் (வயது 40). அரசு ஒப்பந்ததாரராக உள்ளார். அவருடைய மனைவி சித்ரா (35). இவர் மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தார். இவர்களுடைய மகன் திருமஞ்சயன் (14), மகள் லட்சனா (8).

இதில் திருமஞ்சயன் 8-ம் வகுப்பு படித்து வருகிறான். லட்சனா 3-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்த நிலையில் திருமஞ்சயனை, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வரும் கல்வியாண்டில் 9-ம் வகுப்பில் சேர்க்க முடிவு செய்தனர். இதற்காக நேற்று காலை, சித்ரா தனது மகன் திருமஞ்சயன், மகள் லட்சனா, தாயார் முத்துலட்சுமி (66) ஆகியோருடன் ஒரு வாடகை காரில் மேட்டுப்பாளையத்துக்கு புறப்பட்டார். அந்த காரை, மதுரை பி.பி.குளத்தை சேர்ந்த ரெங்கசாமி (56) என்பவர் ஓட்டினார். காலை 10 மணி அளவில் திண்டுக்கல்-பழனி சாலையில் ரெட்டியார்சத்திரத்தை அடுத்த பலக்கனூத்து பகுதியில் கார் சென்று கொண்டிருந்தது.

அப்போது திருப்பூரில் இருந்து மதுரைக்கு ஒரு அரசு பஸ், எதிரே வந்து கொண்டிருந்தது. கண் இமைக்கும் நேரத்தில் அந்த பஸ்சும், சித்ரா குடும்பத்தினர் சென்ற காரும் நேருக்குநேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. மோதிய வேகத்தில் அரசு பஸ், காரை சில மீட்டர் தூரம் இழுத்து சென்றது.

அதன் பின்னரும் நிற்காமல் சென்ற பஸ் சாலையோர பள்ளத்தில் பாய்ந்தது. இந்த விபத்தில் கார் சுக்குநூறாக நொறுங்கின. சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கிய சித்ரா, அவருடைய மகள் லட்சனா, தாயார் முத்துலட்சுமி மற்றும் டிரைவர் ரெங்கசாமி ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். சித்ராவின் மகன் திருமஞ்சயன் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான்.

இதையடுத்து திருமஞ்சயனை மீட்டு சிகிச்சைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான்.

இதற்கிடையே விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஒட்டன்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், ரெட்டியார்சத்திரம் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் விபத்தில் பலியான 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் பஸ்சில் சென்றவர்களுக்கு காயம் ஏற்படவில்லை. விபத்து காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் தாய், மகள் உள்பட 4 பேர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Related Tags :
Next Story