கூடலூர் அருகே கோவில் விழாவில் மோதல்; பெண் படுகாயம் 6 பேர் கைது
கூடலூர் அருகே கோவில் விழாவில் மோதல் ஏற்பட்டது. அப்போது தீப்பந்தத்தை வீசியதால் பெண் ஒருவர் பலத்த காயம் அடைந்தார். இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
கூடலூர்,
கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி சூண்டி அருகே அண்ணா நகர் பகுதியில் செந்தூர்முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் வருடாந்திர திருவிழா கடந்த சில நாட்களாக நடைபெற்றது. நேற்று முன்தினம் பகல் 12 மணிக்கு பறவை காவடிகள், பால் குடங்கள், முளைப்பாரி எடுத்து முக்கிய சாலை வழியாக ஏராளமான பக்தர்கள் சென்று கோவிலை அடைந்தனர். பின்னர் இரவு 7 மணிக்கு கரக ஊர்வலம் நடைபெற்றது.
அப்போது ஒவ்வொரு பக்தர்களின் வீடுகளுக்கு கரகம் கொண்டு செல்லப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த சமயத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் கோவில் கமிட்டியை சேர்ந்த சிலர் தீப்பந்தங்களை ஏந்தியவாறு உடன் சென்றனர். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த மஞ்சுளா (வயது 40) என்பவரின் வீட்டுக்கு கரகம் எடுத்து செல்லப்பட்டது.
அப்போது கோவிலுக்கு சரிவர சாமி கும்பிட வருவது இல்லை. எனவே மஞ்சுளா வீட்டுக்கு செல்ல வேண்டாம் என கூறியதாக தெரிகிறது. இதை மஞ்சுளா தட்டி கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சமயத்தில் கோவில் கமிட்டியினர் வைத்திருந்த தீப்பந்தம் மஞ்சுளா மீது வீசியதாக கூறப்படுகிறது. இதில் அவர் பலத்த தீக்காயம் அடைந்தார்.
இதையொட்டி கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் மஞ்சுளா சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்க்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து மஞ்சுளா அளித்த புகாரின் பேரில் நியூகோப் போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர்கள் சதிஷ், நசீர் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அண்ணா நகரை சேர்ந்த விஜயகுமார் (வயது 22), ஆனந்தராஜ் (21), புஷ்பராஜ் (42), ஜெயராஜ் (42), அருணாசலம் (51), ராஜா ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அண்ணா நகர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையொட்டி போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.