நியூட்ரினோ எதிர்ப்பு பேரணியில் தீக்குளித்த ம.தி.மு.க. பிரமுகர் சாவு: வைகோ நேரில் அஞ்சலி


நியூட்ரினோ எதிர்ப்பு பேரணியில் தீக்குளித்த ம.தி.மு.க. பிரமுகர் சாவு: வைகோ நேரில் அஞ்சலி
x
தினத்தந்தி 2 April 2018 11:00 PM GMT (Updated: 2 April 2018 7:40 PM GMT)

மதுரையில் ம.தி.மு.க. சார்பில் நடைபெற்ற நியூட்ரினோ எதிர்ப்பு பேரணியில் தீக்குளித்த ம.தி.மு.க. பிரமுகர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது உடலுக்கு வைகோ நேரில் அஞ்சலி செலுத்தினார்.

சிவகாசி,

மதுரை பழங்காநத்தத்தில் கடந்த 31-ந்தேதி ம.தி.மு.க. சார்பில் நியூட்ரினோ எதிர்ப்பு நடைபயண தொடக்க விழா நடைபெற்றது. இந்த கூட்டம் முடிந்தவுடன் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நடைபயணமாக தேனிமாவட்டம் செல்ல இருந்தார்.

இந்த கூட்டத்தில் வைகோ உணர்ச்சிகரமாக பேசிக் கொண்டிருந்தபோது, கூட்டத்தில் கீழே நின்று கொண்டிருந்த விருதுநகர் மாவட்ட ம.தி.மு.க. இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவி (வயது 50) என்பவர் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து தன்மீது ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மதுரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அன்றைய தினமே வைகோ ஆஸ்பத்திரிக்கு சென்று ரவியை சந்தித்து ஆறுதல் கூறி விட்டு நடைபயணம் கிளம்பினார்.

இந்தநிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ரவி, நேற்று அதிகாலை சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

இந்தத்தகவல் உசிலம்பட்டியில் இருந்த வைகோவுக்கு தெரியவந்ததும், அங்கிருந்து அவர் உடனடியாக கிளம்பி மதுரை வந்தார்.

ரவியின் உடல், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்தது. அங்கு வந்த வைகோ ரவியின் உடலுக்கு கண்ணீர் சிந்தியப்படி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் ரவியின் உடல் அவரது சொந்த ஊரான சிவகாசி நாடகசாலையில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.

ரவியின் உடல் வந்த வாகனத்தை தொடர்ந்து வைகோ மற்றும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் ரவியின் வீட்டுக்கு வந்தனர். அங்கு வீட்டின் வெளியே ரவியின் உடல் வைக்கப்பட்டது. ரவியின் மனைவி முத்துலட்சுமி, மகன்கள் ஜெயபிரகாஷ், யுதீஷ்டன் ஆகியோருக்கு வைகோ ஆறுதல் கூறினார்.

ரவியின் உடலுக்கு பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்பு ரவியின் உடல் நகராட்சி மின் மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதில் வைகோ பேசியதாவது:-

நியூட்ரினோ திட்டத்தை நான் தனி ஒருவனாக கோர்ட்டு மூலம் தடுத்து நிறுத்தி இருக்கிறேன். இந்த திட்டத்தை எதிர்த்து பல லட்சம் மக்களை திரட்டவே 10 நாள் நடைபயணம் செல்ல முடிவு செய்தேன். கூட்ட மேடையில் நான் மற்ற கட்சி தலைவர்களுடன் மகிழ்ச்சியாக இருந்த நேரத்தில் மேடையின் எதிர்திசையில் ஒரு நெருப்பு பந்து ஒரு பனை மர உயரத்துக்கு எரிந்தபடி வருகிறது. தொண்டர்படையினர் தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

என்னவென்று விசாரித்தபோது அந்த வீரத்திருமகன் ரவி என தெரியவந்தது. ஆஸ்பத்திரியில் அவரை சந்தித்தபோது அவர், “நீங்கள் எவ்வளவு பெரிய தியாகங்களை செய்து வருகிறீர்கள் இந்த மக்களுக்காக நான் என்ன பெரிய தியாகம் செய்து விட்டேன். இது மிக சின்ன தியாகம் தான் ஐயா“ என்று என்னிடம் சொன்னார். தன் பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் என்று என்னிடம் கேட்டுக்கொண்டார். அதை நான் செய்வேன்.

ஆஸ்பத்திரியில் மரண வாக்குமூலம் வாங்க வந்த மாஜிஸ்திரேட்டிடம் ரவி, “இந்த முடிவு நானாக சுயமாக எடுத்த முடிவு. என்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை. நியூட்ரினோ திட்டம் வந்தால் தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும். இந்த போராட்டத்தை வேகப்படுத்த வேண்டும் என்று தான் என்னை பலி கொடுக்க முன்வந்தேன்“ என்றார்.

தீக்குளிக்க வேண்டும் என்ற முன்னேற்பாடுடன் தான் ரவி கூட்டத்துக்கு வந்துள்ளார். ஆஸ்பத்திரியில் ரவிக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவர் இறந்துவிட்டார். ரவி அழியாத புகழைப் பெற்று விட்டார். நான் என் உயிர் இருக்கும் வரை தமிழக மக்களுக்காக போராடுவேன். தமிழ்நாட்டுக்காக போராடுவேன். இதுபோன்ற நாசகார திட்டங்களை எதிர்த்து போராடுவேன்.

ரவியின் குடும்பத்தை காப்பாற்ற வேண்டியது என்னுடைய கடமை. என்னுடைய போராட்டம் வெற்றி பெற வேண்டும் என்று தான் ரவி தீக்குளித்தார். என்னுடைய போராட்டங்களை பற்றியும், என்னைப் பற்றியும் கொச்சைப்படுத்தி சிலர் கடந்த ஒரு வாரமாக வலைதளங்களில் மீம்ஸ் போடுகிறார்கள். அவர்களுக்கு சவுக்கடி கொடுக்கத்தான் ரவி தீக்குளித்தார்.

எனது போராட்டம் புனிதமானது என உலகுக்கு உணர்த்திவிட்டார். ரவியின் மனைவிக்கும் அவருடைய மகன்களுக்கும் ம.தி.மு.க. தனது கடமையை செய்யும். வைகோவின் அரசியல் பயண வரலாற்றில் சிவகாசி ரவியின் பெயர் நிரந்தரமாக இருக்கும்.

இவ்வாறு வைகோ பேசினார். 

Related Tags :
Next Story