கல்லங்குறிச்சி கலியுகவரதராச பெருமாள் கோவில் தேரோட்டம்


கல்லங்குறிச்சி கலியுகவரதராச பெருமாள் கோவில் தேரோட்டம்
x
தினத்தந்தி 2 April 2018 10:30 PM GMT (Updated: 2 April 2018 9:28 PM GMT)

கல்லங்குறிச்சி கலியுகவரதராச பெருமாள் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

அரியலூர்,

அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சியில் கலியுகவரதராச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் பெருந்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. அதேபோல் இந்த ஆண்டுக்கான பெருந்திருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலை, மாலை என இருவேளைகளில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இரவு பல்வேறு வாகனங்களில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வீதி உலா நடைபெற்றது.

தேரோட்டம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி பெருமாள் ஸ்ரீதேவி, பூ தேவி மற்றும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதைதொடர்ந்து காலை 6 மணிக்கு பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி பெரிய தேரிலும், சின்ன தேரில் ஆஞ்சநேயரும் எழுந்தருளினர். இதையடுத்து ஏராளமான பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என்ற பக்தி கோஷம் முழங்க வாணவேடிக்கையுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக அசைந்து ஆடி வந்தது. அப்போது சுவாமிக்கு பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர். பின்னர் காலை 10 மணிக்கு தேர் கோவில் நிலையை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு ஏகாந்த சேவை நடைபெறுகிறது. 

Next Story