ஏழை மூதாட்டியின் வீட்டிற்கு சென்று உணவளித்த கரூர் கலெக்டர்


ஏழை மூதாட்டியின் வீட்டிற்கு சென்று உணவளித்த கரூர் கலெக்டர்
x
தினத்தந்தி 3 April 2018 4:30 AM IST (Updated: 3 April 2018 3:01 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் ஏழை மூதாட்டியின் வீட்டிற்கு சென்று, கலெக்டர் அன்பழகன் உணவளித்தார். மேலும் அவருக்கு உதவித்தொகை வழங்கவும் நடவடிக்கை எடுத்தார்.

கரூர்,

கரூர் மாவட்ட கலெக்டராக அன்பழகன் கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி பொறுப்பேற்றார். அன்றைய தினம் அவர் நிருபர்களிடம் கூறுகையில், “கரூர் மாவட்டத்தை ஒரு சீர்மிகு முன்னேற்றமடைந்த மாவட்டமாக மாற்றுவதற்கான முயற்சிகளை எடுக்க, அனைத்து அரசு அலுவலர்களுடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் செயல்படும். அரசின் அனைத்து நலத்திட்டங்களும் சாமானிய மக்களுக்கும் சென்றடையும் வகையில் செயல்படுவேன்” என்றார்.

அதற்கேற்ப அவர் பல்வேறு திட்டங்களையும் அதிகாரிகளுடன் ஆலோசித்து செயல்படுத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த விவசாயிகளை, கலெக்டர் அன்பழகன் தேடிச்சென்று தனது அறைக்கு அழைத்து வந்து மனுவை வாங்கினார்.

உணவு எடுத்துச்சென்ற கலெக்டர்

இந்தநிலையில் கரூர் அருகே சின்னமநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த ராக்கம்மாள் (வயது 80) என்ற மூதாட்டியின் வீட்டுக்கு கலெக்டர் உணவு எடுத்துச்சென்று, அவருக்கு பரிமாறி மூதாட்டியை நெகிழ்ச்சியடைய செய்தார்.

இதுபற்றிய விவரம் வருமாறு:-

ராக்கம்மாள் மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் கலெக்டர் அன்பழகனுக்கு தகவல் தெரிவித்திருந்தனர். இதையடுத்து மூக்கணாங்குறிச்சி கிராமத்தில் சமீபத்தில் நடந்த மனுநீதி நாள் முகாமிற்கு சென்ற கலெக்டர் அன்பழகன், ராக்கம்மாளின் வீட்டுக்கு தனது வீட்டில் செய்த உணவுகளை எடுத்து சென்றார்.

வந்தது கலெக்டர் என்பதை அறியாமல், அவரிடம் ராக்கம்மாள் யாருய்யா நீ? என்று கேள்வி எழுப்பினார். அப்போது, தான் கலெக்டர் எனவும், தங்களது ஏழ்மை நிலையை கண்டு நேரில் வந்திருப்பதாகவும், தங்களுக்காக உணவு சமைத்து, எடுத்து வந்திருப்பதாகவும் கலெக்டர் கூறினார்.

கலெக்டர் கூறியதை கேட்டு மூதாட்டி ராக்கம்மாள் திகைத்து போனார். பின்னர் மூதாட்டியை அமர வைத்து, தான் கொண்டு வந்த சாதம், பொறியல், வடை, பாயாசம், சாம்பார், ரசம், மோர், கோழிக்குழம்பு ஆகியவற்றை கலெக்டர் பரிமாறினார். கலெக்டரும் மூதாட்டியுடன் தரையில் அமர்ந்து சாப்பிட்டார். சாப்பிட்டு முடித்ததும் கலெக்டருடன் ஒரு புகைப்படம் எடுக்க விரும்புவதாக மூதாட்டி கூறினார். கலெக்டரும் மூதாட்டியின் அருகில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதன்பிறகு அங்கிருந்து கலெக்டர் புறப்பட்டு சென்றார்.

பின்னர் ராக்கம்மாளுக்கு முதியோர் உதவித்தொகையான மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான ஆணையை கலெக்டர் பிறப்பித்து உடனடியாக அதை வழங்க நடவடிக்கை எடுத்தார். ஏழை மூதாட்டியின் வீட்டிற்கு வந்த கலெக்டரின் பண்பை கண்டு, அப்பகுதி பொதுமக்கள் அவரை பாராட்டினர். 

Next Story