காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய-மாநில அரசுகளை கண்டித்து சாலை மறியல்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய-மாநில அரசுகளை கண்டித்து சாலை மறியல்
x
தினத்தந்தி 3 April 2018 4:15 AM IST (Updated: 3 April 2018 3:01 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய-மாநில அரசுகளை கண்டித்து நாகையில் தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகப்பட்டினம்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும், உடனே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் நாகை தாசில்தார் அலுவலகம் முன்பு தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் திடீரென சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு தி.மு.க. நாகை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் நாகைமாலி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன் ஆகியோர் தலைமை தாங்கினர். காங்கிரஸ் கட்சி நகர தலைவர் ரவிச்சந்திரன், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் அய்யாப்பிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காத தமிழக அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

100 பேர் கைது

இதில் தி.மு.க. நகர செயலாளர் போலீஸ் பன்னீர், மாவட்ட துணை செயலாளர் மனோகரன், ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. மாரிமுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் பெரியசாமி, ம.தி.மு.க. நகர செயலாளர் சோழன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் அறிவழகன், மாவட்ட துணை செயலாளர் பேரறிவாளன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வெளிப்பாளையம் போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட 100 பேரை கைது செய்து அருகில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் நாகை - நாகூர் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.


Next Story