காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து மாணவர்கள் ரெயில் மறியல் முயற்சி


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து மாணவர்கள் ரெயில் மறியல் முயற்சி
x
தினத்தந்தி 3 April 2018 4:30 AM IST (Updated: 3 April 2018 3:02 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து புதிய தமிழகம் கட்சியினர் ரெயில் மறியலில் ஈடுபட முயன்றனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 35 பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்,

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசை கண்டித்தும், உடனடியாக மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசை வலியுறுத்தியும் புதிய தமிழகம் கட்சியினர் நேற்று திடீரென்று மாவட்ட செயலாளர் கோவி.உத்திராபதி தலைமையில் ரெயில் மறியலில் ஈடுபட முயன்றனர்.

திருச்சியில் இருந்து தஞ்சை வழியாக சென்னைக்கு சென்ற சோழன் விரைவு ரெயிலை மறிப்பதற்காக தஞ்சை ரெயில் நிலையத்திற்குள் நேற்று காலை நுழைய முயன்றனர். ஆனால் அவர்கள் ரெயில் நிலையத்திற்குள் நுழைந்து விடாமல் இருப்பதற்காக இரும்பு கம்பிகளால் ஆன தடுப்புகளை போலீசார் ஏற்படுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த தடுப்புகளையும் மீறி ரெயில் நிலையத்திற்குள் செல்ல முயன்ற புதிய தமிழகம் கட்சியினர் 35 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர்.

இந்த நிலையில் நேற்று மாலை சோழன் விரைவு ரெயிலை மறிப்பதற்காக டெல்டா மாணவர்கள் கூட்டமைப்பினர் டெல்டா மாணவர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் அருண்சோரி தலைமையில் தஞ்சை ரெயிலடியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு ரெயில் நிலையத்திற்குள் நுழைவதற்காக வந்தனர். ஆனால் அவர்களை ரெயில் நிலையத்திற்குள் நுழையவிடாமல் ரெயில் நிலைய நுழைவு வாயிலில் இரும்பு கம்பிகளால் ஆன தடுப்புகளை அமைத்து வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஜோதிமகாலிங்கம், பெரியசாமி மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் தடுத்தனர்.

இதனால் ரெயில் நிலையத்திற்குள் நுழைவதற்காக இரும்பு கம்பிகள் மீது மாணவர்கள் ஏறினர். அவர்களை கீழே இறக்குவதற்காக போலீசார் பிடித்து இழுத்தபோது மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து மாணவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி செல்ல முயன்றனர். இதனால் மாணவர்கள் அனைவரும் அங்கேயே தரையில் அமர்ந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், மத்திய அரசுக்கு துணை போகும் மாநில அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் 42 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்று தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். காவிரி மேலாண்மை வாரியத்தை மத்தியஅரசு அமைக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்று மாணவர்கள் தெரிவித்தனர். 

Next Story