காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி அ.தி.மு.க.வினர் உண்ணாவிரதம்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி அ.தி.மு.க.வினர் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 3 April 2018 10:30 PM GMT (Updated: 3 April 2018 7:51 PM GMT)

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தேனியில் அ.தி.மு.க. வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்றனர்.

தேனி,

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட 6 வார காலத்துக் குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை. இதை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன.

அ.தி.மு.க. சார்பில் மாநிலம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தேனி மாவட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் தேனி பழைய பஸ் நிலையம் அருகில் மதுரை சாலையில் நடந்தது.

இதற்கு முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. அமைப்புச் செயலாளருமான நத்தம் விசுவநாதன் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-

ஜெயலலிதா பெற்றுத் தந்த தீர்ப்பை செயல்படுத்தவே இந்த உண்ணாவிரத போராட்டத்தை நடத்துகிறோம். காவிரி தண்ணீர் வரவில்லை என்றால் தமிழகத்தின் நீர்நிலைகள் பாலைவனமாகி விடும். காவிரி நதிநீர் பிரச்சினையில் தி.மு.க. துரோகம் செய்துள்ளது. ஆனால், இன்றைக்கு பலகட்ட போராட்டங்களை மு.க.ஸ்டாலின் அறிவித்து வருகிறார்.

மத்திய அரசின் மீது ஒரு மாநில அரசு கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்கிறது என்றால், அது அ.தி.மு.க. அரசு தான். வேறு எந்தக் கட்சியாலும் இது முடியாது. தமிழகம் இழந்த உரிமைகளை மீட்டெடுப்போம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை பல கட்ட போராட்டம் நடத்த தொண்டர்களும், பொதுமக்களும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னாள் எம்.எல்.ஏ. தவசி, மாவட்ட செயலாளர் எஸ்.பி.எம். சையதுகான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை முன்னாள் செயலாளர் ஓ.ப.ரவீந்திரநாத்குமார், அ.தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் முருக்கோடை ராமர், தேனி நகர செயலாளர் முருகேசன், ஒன்றிய செயலாளர் ஆர்.டி.கணேசன், பெரியகுளம் ஒன்றிய செயலாளர் அன்னபிரகாஷ், முன்னாள் மாவட்ட செயலாளர் சிவக்குமார், தேனி நகர இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் சுந்தரம் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உண்ணாவிரதத்துக்காக சாலையோரம் பந்தல் போடப்பட்டு இருந்தது. பந்தலுக்கு அடியில் ஆயிரக்கணக்கானோர் அமர்ந்து இருந்தனர். அதில் இடமின்றி சாலையோரம் பூட்டிக்கிடந்த கடைகளின் வாசல்களிலும் பலர் அமர்ந்திருந்தனர். இதில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

உண்ணாவிரதம் எதிரொலியாக, மதுரை சாலையில் பழைய பஸ் நிலையத்தில் இருந்து பங்களாமேடு பகுதி வரை வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டது. பஸ்கள், கனரக வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதைகளில் திருப்பி விடப்பட்டன. குறிப்பாக மதுரை சாலையில் வந்த வாகனங்கள் பங்களாமேடு திட்டச்சாலை வழியாக கம்பம் சாலைக்கு திருப்பி விடப்பட்டன. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதேபோல், மதுரை சாலைக்கு செல்ல வேண்டிய வாகனங்கள் பெரியகுளம் சாலை, என்.ஆர்.டி. சாலை வழியாக திருப்பி விடப்பட்டன. இதனால், பெரியகுளம் சாலையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

Next Story