திருப்பத்தூரில் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து தருவதாக பெண்ணிடம் ரூ.20 ஆயிரம் அபேஸ் வாலிபருக்கு வலைவீச்சு
திருப்பத்தூரில் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து தருவதாக பெண்ணிடம் ரூ.20 ஆயிரம் அபேஸ் செய்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் அருகே உள்ள குரிசிலாப்பட்டு வடுகமுத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மனைவி சாவித்திரி (வயது 61). இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பத்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க வந்தார்.
அந்த சமயத்தில் அங்கிருந்த வாலிபர் ஒருவரிடம் பணம் எடுத்து தருமாறு சாவித்திரி கேட்டுள்ளார். அதைத் தொடர்ந்து அந்த வாலிபர், சாவித்திரியிடம் இருந்து ஏ.டி.எம். கார்டு மற்றும் ஏ.டி.எம். கார்டின் ரகசிய எண்ணை கேட்டுள்ளார். பின்னர் அவர், ஏ.டி.எம். எந்திரத்தில் கார்டை போட்டு பார்த்தார்.
இதனையடுத்து அந்த வாலிபர் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் இல்லை. வேறு ஏ.டி.எம். மையத்திற்கு சென்று பணம் எடுத்துக்கொள்ளுங்கள் என்று சாவித்திரியிடம் தெரிவித்தார். உடனே சாவித்திரி வேறு ஏ.டி.எம். மையத்திற்கு சென்று பார்த்தபோது, அவரது வங்கி கணக்கில் பணம் இல்லை என்பது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், வங்கி மேலாளரிடம் சென்று புகார் தெரிவித்தார். சாவித்திரியின் வங்கி கணக்கை சரிபார்த்த மேலாளர், சற்று நேரத்திற்கு முன்பு தான் உங்கள் கணக்கில் இருந்து ரூ.20 ஆயிரம் எடுக்கப்பட்டு உள்ளது என கூறினார். அப்போது தான் அந்த வாலிபர் தன்னை ஏமாற்றிவிட்டார் என சாவித்திரிக்கு தெரியவந்தது.
இதுகுறித்து திருப்பத்தூர் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி மூலம் சம்பந்தப்பட்ட வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story