அரசு பள்ளியின் ஆய்வக உதவியாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பறிப்பு


அரசு பள்ளியின் ஆய்வக உதவியாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பறிப்பு
x
தினத்தந்தி 3 April 2018 10:15 PM GMT (Updated: 3 April 2018 8:50 PM GMT)

மொபட் மீது மோட்டார் சைக்கிளை மோதி கீழே தள்ளி விட்டு அரசு பள்ளியின் ஆய்வக உதவியாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி நகையை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பாப்பாரப்பட்டி,

தர்மபுரி அருகே உள்ள குள்ளனூரைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மனைவி சாரதா (வயது 42). இவர் பாப்பாரப்பட்டி அருகே உள்ள மூக்கம்பட்டி அரசு மாதிரி பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வருகிறார்.இவர் நேற்று முன்தினம் வேலை முடிந்து பள்ளியில் இருந்து தனது மொபட்டில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது சாரதாவை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் 2 மர்ம ஆசாமிகள் வந்தனர். ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் மர்ம ஆசாமிகள் மோட்டார் சைக்கிளை முன்னால் சென்ற மொபட் மீது மோதினர். இதில் நிலைதடுமாறி சாரதா கீழே விழுந்தார். அப்போது அந்த ஆசாமிகள் கத்தியை காட்டி மிரட்டி சாரதா கழுத்தில் அணிந்து இருந்த 3½ பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர்.

வலைவீச்சு

இதனால் அதிர்ச்சி அடைந்த சாரதா கூச்சலிட்டார். அவருடைய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தனர். இது குறித்து சாரதா பாப்பாரப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். மர்ம ஆசாமிகள் பறித்து சென்ற நகையின் மதிப்பு ரூ.70 ஆயிரம் ஆகும். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story