கர்நாடகத்தில் ஒரே நாளில் அமித்ஷா-ராகுல் காந்தி போட்டி பிரசாரம்


கர்நாடகத்தில் ஒரே நாளில் அமித்ஷா-ராகுல் காந்தி போட்டி பிரசாரம்
x
தினத்தந்தி 4 April 2018 2:45 AM IST (Updated: 4 April 2018 2:45 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நேற்று ஒரே நாளில் போட்டி பிரசாரம் செய்தனர்.

கர்நாடக தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி யுள்ளது. பிரதமர் மோடி சூறாவளி சுற்றுப் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக சட்ட சபைக்கு மே மாதம் 12-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற 17-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளன. ஜனதா தளம்(எஸ்) கட்சி மட்டும் 126 தொகுதி களுக்கு முதல் வேட் பாளர் பட்டியலை ஏற்கனவே அறிவித்துவிட்டது.

தேசிய கட்சிகளான பா.ஜனதாவும், காங்கிரசும் வேட்பாளர்களின் பட்டியலை இறுதி செய்து வருகின்றன. இப்போதே பட்டிலை வெளியிட்டுவிட்டால், டிக்கெட் கிடைக்காதவர்கள் வேறு கட்சிக்கு தாவி விடுவார்கள் என்று அந்த கட்சிகள் பயப்படுகின்றன. அதனால் தான் வேட்பாளர்களின் பட்டியலை மனு தாக்கல் தொடங்குவதற்கு 2 நாட்களுக்கு முன்பு வெளியிட அக்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

கடைசி நேரத்தில் டிக்கெட் கிடைக்காதவர்கள் வேறு கட்சிக்கு சென்றாலும் வாய்ப்பு கிடைக்காது. அதனால் அவர்களை சமாதானப்படுத்தி தங்களின் கட்சிகளிலேயே தக்க வைத்துக்கொள்ள முடியும் என்று அக்கட்சிகளின் தலைவர்கள் கருதுகிறார்கள். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த பிப்ரவரி மாதம் தனது முதல் சுற்றுப்பயணத்தை கர்நாடகத்தில் தொடங்கினார்.

அவர் சீரான இடைவெளியில் கர்நாடகத்திற்கு வந்து மண்டலம் வாரியாக சுற்றுப்பயணம் செய்து மக்களின் ஆதரவை திரட்டி வருகிறார்கள். அதேபோல் ராகுல் காந்திக்கு போட்டியாக பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவும் மண்டலம் வாரியாக சென்று பிரசாரம் செய்து வருகிறார். இருவரும் தற்போது கர்நாடகத்திற்கு தீவிரமான சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று சிவமொக்கா, தாவணகெரேயில் சுற்றுப்பயணம் செய்து கட்சி பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார். அதேபோல் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா ஹாவேரி மாவட்டம் காகினெலேயில் நடைபெற்ற பா.ஜனதா பிற்படுத்தப்பட்ட பிரிவுகளின் மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். அதைத்தொடர்ந்து பாதாமிக்கு சென்று சிவயோகி மடத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்றார்.

இரு தேசிய கட்சிகளின் தலைவர்களும் கர்நாடகத்தில் நேற்று ஒரே நாளில் போட்டி பிரசாரத்தில் ஈடுபட்டனர். மேலும் கர்நாடக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு மனு தாக்கல் தொடங்கிவிட்டால் தேர்தல் களத்தில் அனல் பறக்கும். கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடி மூன்று முறை கர்நாடகத்திற்கு வந்து பிரசாரம் செய்துவிட்டு சென்றார்.

பெங்களூரு, மைசூரு, தாவணகெரே உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்ற பா.ஜனதா கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசினார். அதன் பிறகு ஒரு ஆய்வு நடத்தப்பட்டதாகவும், அதில் மோடி வந்து பேசிவிட்டு சென்ற பிறகும் கர்நாடகத்தில் மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்படவில்லை என்று தெரிய வந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து பிரதமர் மோடி கர்நாடகத்திற்கு தொடர்ச்சியாக வருவதில் சிறிது இடைவெளி விடப்பட்டுள்ளது.

வேட்புமனு தாக்கல் தொடங்கிய பிறகு மோடி கர்நாடகத்தில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தீவிர பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும், ஒரு நாளைக்கு 3 முதல் 4 கூட்டங்களில் அவர் பேச உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

Next Story