காவிரி கைவிரித்தால் தமிழகம் என்ன ஆகும்?


காவிரி கைவிரித்தால் தமிழகம் என்ன ஆகும்?
x
தினத்தந்தி 4 April 2018 3:38 PM IST (Updated: 4 April 2018 3:38 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தின் 25 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு காவிரி தண்ணீரைவிட்டால் பாசனத்திற்கு வேறு வழியில்லை.

காவிரி... இந்த வார்த்தையைப் படித்தவுடன், ‘அட... அது தஞ்சாவூர் விவசாயிங்க பிரச்சினைல்ல’ என்றுதான் இன்றைக்குத் தமிழர்கள் பலரும் நினைக்கிறார்கள்.

ஆனால், சென்னை தொடங்கி ராமநாதபுரம் வரையிலும், திருப்பூரிலிருந்து வேலூர் வரையும், ஒகேனக்கல் முதல் நாகப்பட்டினம் வரையும் தமிழகத்தின் 15 மாவட்டங்கள் குடிநீருக்காக காவிரியைத்தான் முற்றாக நம்பியிருக்கின்றன. இன்னும் 11 மாவட்டங்களில் குடிநீராக மட்டுமல்ல; விவசாயத்திற்கான பாசன ஆதாரமாகவும் இருப்பது காவிரிதான்!

தமிழகத்தின் 25 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு காவிரி தண்ணீரைவிட்டால் பாசனத்திற்கு வேறு வழியில்லை. தமிழ்நாட்டிற்கான உணவுத்தேவையில் 60 சதவீதத்திற்கு மேல் நெல் உற்பத்தி செய்யப்படுவதற்கு காவிரியே மூலக் காரணம். தமிழக மக்களில் 85 சதவீதம் பேர், அதாவது ஏறத்தாழ 5 கோடி மக்களுக்கு காவிரி தண்ணீரே குடிநீர். மொத்தத்தில் மாநிலத்திலுள்ள 26 மாவட்டங்களுக்கு உயிர்நாடியாக இருக்கிறது காவிரி தண்ணீர்!

இதையெல்லாம் விட தமிழகத்தில் அதிக தூரம் ஓடும் ஒரே ஜீவநதி காவிரி! அதில் தண்ணீர் ஓடாவிட்டால் ஏற்கனவே கீழே போய்க் கொண்டிருக்கும் நிலத்தடி நீர் அதல பாதாளத்திற்குப் போகும். இப்போது சொல்லுங்கள்...! காவிரியில் தண்ணீர் வராமல் போனால், அது வெறுமனே தஞ்சாவூர்காரங்க பிரச்சினையா? இல்லை, ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் பிரச்சினையா?

ஆனால் இந்தப் புரிதல் தமிழகத்தில் இல்லாமலே போய்விட்டது. அந்த முனையில் கர்நாடக அரசு தொடங்கி அத்தனை அமைப்புகளும் பொய்யான புள்ளிவிவரங்களையும் தகவல்களையும் பரப்பி தமது மக்களுக்கு வெறியூட்டி, மாற்றி வைத்திருக்கின்றன. இங்கே வெறியூட்ட வேண்டாம். குறைந்தபட்சம் காவிரிப் பிரச்சினையைப் பற்றிய விழிப்புணர்வு கூட இல்லை.

உலகளவில் நாகரிகங்களின் அடிப்படையாக ஆறுகள் தான் பார்க்கப்படுகின்றன. பல தேசங்களின் அடையாளங்களாக அவை திகழ்கின்றன. நைல் நதியை அடிப்படையாக கொண்டது பழம்பெரும் எகிப்திய நாகரிகம். லண்டன் என்றதும் தேம்ஸ் நதியே மனதில் நிழலாடும். ரஷியாவுக்கு வால்கா நதி. சீனாவுக்கு ஒரு மஞ்சள் நதி. இந்தியா என்றதும் கங்கை. இந்த வரிசையில் தமிழ்நாட்டின் நீண்ட நெடிய வரலாற்றோடும் மக்களின் வாழ்வோடும் பின்னிப்பிணைந்திருப்பது காவிரி. புராணங்களும், இதிகாசங்களும், இலக்கியங்களும், காப்பியங்களும், கல்வெட்டுகளும் இதனை ஆணித்தரமாக அடித்துச் சொல்கின்றன.

எல்லாம் இருந்தும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக காவிரியில் உள்ள உரிமையைக் கடந்த 50 ஆண்டுகளில் படிப்படியாக இழந்து, கர்நாடகாவில் தேக்கி வைக்க முடியாமல் நிரம்பி வழியும் மிச்ச சொச்ச நீரை மட்டுமே பெற்றுக்கொள்ளும் நிலைக்கு வந்திருக்கிறோம். அதிலும் இப்போது சிக்கல்.

மூன்று பருவம் சாகுபடி செய்து, அதனை இப்போது ஒரேயொரு பருவமாக சுருக்கிக் கொண்டிருக்கும் தமிழக காவிரி டெல்டா பகுதியில் விவசாயம் மொத்தமாக வீழ்ச்சியடையும். உணவு உற்பத்தியில் ஏற்கனவே பற்றாக்குறை மாநிலமாக உள்ள தமிழ்நாடு இப்போது பெரும் வீழ்ச்சியை நோக்கி பயணிக்கிறது.

பஞ்சாப், அரியானா மாநிலங்களில் இருந்து இந்திய உணவுக்கழகம் கொள்முதல் செய்யும் அரிசியைதான் தமிழகம் நம்பியிருக்கிறது. சராசரியாக ஒரு மாதத்திற்கு ஒரு லட்சம் டன் அரிசியை உணவுக்கழகத்திடம் இருந்து தமிழ்நாடு வாங்குகிறது. இந்த லட்சணத்தில் காவிரிப் பாசனப்பகுதியில் சுத்தமாக அரிசி விளையவில்லை என்றால் தமிழ்நாட்டின் மொத்த உள் மாநில உற்பத்தி (ஜி.எஸ்.டி.பி.) குறையும்.

மாநிலத்தில் அரிசிப் பஞ்சம் ஏற்படும். அதனால் அரிசி விலை தாறுமாறாக உயரும். காவிரி தண்ணீரால் நெல் உற்பத்தியைப் பெருக்கி மிகை அரிசி மாநிலமாக திகழும் கர்நாடகாவிடம் கையேந்தி நிற்கும் சூழல் உருவாகும். பெரும்பான்மையான தமிழக மக்களின் வாழ்க்கைத்தரத்திலும் இது எதிரொலிக்கும். வெறும் தண்ணீர் பிரச்சினை என்பதைத்தாண்டி சமூக, பொருளாதார பிரச்சினையாக மாறும்.

இன்னொரு பக்கம் காவிரிப் பிரச்சினையில் தமிழகத்திற்கு கிடைக்கின்ற தோல்விகள் கேரளா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களுடன் நமக்கிருக்கும் நதிநீர் சிக்கல்களிலும் எதிரொலிக்கின்றன. கர்நாடகாவைப் பின்பற்றி அவர்களும் தமிழகத்தை வஞ்சிக்கலாம் என்று நினைக்கிறார்கள்; செயல்படுகிறார்கள்.

உலகெங்கும் நதிநீர்ப் பிரச்சினைகள் இருக்கின்றன. அமெரிக்காவுக்கு, ஜெர்மனிக்கு, பிரான்சுக்கு, சீனாவுக்கு, அவ்வளவு ஏன், பரம எதிரிகளான பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலும் கூட ஆற்றுநீர்ச் சிக்கல் இருக்கவே செய்கிறது. அவையெல்லாம் சட்டப்படியும் நியாயப்படியும் கையாளப்படுகின்றன.

இந்தியாவுக்குள்ளே மற்ற மாநிலங்களுக்கு இடையே இருக்கும் நதி நீர்ப்பிரச்சினைகள் இருதரப்புக்கும் பாதிப்பில்லாத சுமுகமான ஒப்பந்தங்களின் வழியே தீர்க்கப்படுகின்றன. இந்தியாவின் மீது கொலைவெறியோடு இருக்கும் பாகிஸ்தானுடன் கூட நம்மால் சண்டையின்றி தண்ணீரைப் பகிர்ந்து கொள்ள முடியும் போது, கர்நாடகாவுடன் அது சாத்தியப்படாமல் போவதற்கு காரணம் என்ன?

‘நதி உற்பத்தியாகிற மேல்பகுதி நாடு, அந்த நதிநீரைப் பயன்படுத்துகிற கீழ் பகுதி நாட்டுக்கு காலங்காலமாக இருக்கிற தண்ணீர் உரிமையைத் தட்டிப் பறிக்க முடியாது; அவர்கள் பாதிப்படைகிற வகையில் எதையும் செய்ய முடியாது; செய்யக்கூடாது’ என்பது உலகம் ஒப்புக்கொண்ட, செயல்படுத்துகிற அடிப்படை நதி நீர்ப்பங்கீட்டுத் தர்மம்.

ஆனால் அதையெல்லாம் காலில் போட்டு மிதித்துவிட்டு, பூமிப்பந்தின் எந்த மூலையிலும் இல்லாத அளவுக்கு பிடிவாதமும் முரட்டுவாதமும் காவிரி விவகாரத்தில் செய்யப்படுவதால்தான் காவிரிப்பிரச்சினை தீர்க்க முடியாத இடத்திற்குப் போய் நிற்கிறது.

‘அடிப்படை நியாயமா, அரசியலமைப்பா, நடுவர் மன்றமா, உச்சநீதிமன்றமா யார் சொன்னாலும் கட்டுப்பட மாட்டோம்’ என்று பட்டவர்த்தனமாக கர்நாடகா நடந்து கொள்கிறது. எதற்கும் அடங்காத கர்நாடகாவைத் தட்டிக்கேட்க வேண்டிய மத்திய அரசு, எல்லா காலத்திலும் தமிழகத்தை மாற்றாந்தாய் பிள்ளையாகவே நடத்திவந்திருக்கிறது. அதற்கு எந்த கட்சியும் விதிவிலக்கல்ல.

இதன் சமீபத்திய உதாரணம் தான் மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு அடித்த பல்டி. மேலும் ‘காவிரி’ என்று வந்துவிட்டால், கர்நாடகாவில் ஒலிப்பது போன்ற ஒருமித்த குரல் தமிழ்நாட்டில் ஒலிப்பது இல்லை. ஏகப்பட்ட சுருதி பேதங்கள்.

அதனால்தான் கடைசிப்புகலிடமான உச்சநீதிமன்றம் கூட, கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதார பிரச்சினையில் வார்த்தை விளையாட்டு நடத்திக் கொண்டிருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரிய வழக்கின் தீர்ப்பில் பயன்படுத்தப்பட்ட ‘ஸ்கீம்’ என்ற வார்த்தையும் அதற்கு உச்சநீதிமன்றம் கொடுத்திருக்கும் விளக்கமும் கலங்க வைத்திருக்கின்றன. இன்னொரு பக்கம் காவிரி தண்ணீருக்காக வெடித்திருக்கும் போராட்டங்களுக்குத் தடை இல்லை என உயர்நீதிமன்றம் சொல்லியிருக்கிறது.

ஆனால், ஒரு வாரமோ, 10 நாட்களோ பேசிவிட்டு, இன்னொன்றுக்குத் தாவி விடுவதைப் போன்ற சிக்கல் இல்லை இது. எந்தக் கோணத்தில் பார்த்தாலும் தமிழகத்தின் உயிர்ப்பிரச்சினை. ஒரே குரலில் தமிழ்நாடு எழுந்து நின்று ஒருமித்த அரசியல் அழுத்தம் கொடுத்தால் மட்டுமே காவிரி பிரச்சினையில் நியாயம் கிடைக்கும். 

கோமல் அன்பரசன், தலைவர், ‘காவிரி’ அமைப்பு
1 More update

Next Story