கம்பம் பகுதியில் சாரல் மழை; விவசாயிகள் மகிழ்ச்சி


கம்பம் பகுதியில் சாரல் மழை; விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 5 April 2018 3:45 AM IST (Updated: 4 April 2018 11:02 PM IST)
t-max-icont-min-icon

கம்பம் பள்ளதாக்கு பகுதிகளில் சாரல் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கம்பம், 

கம்பம் பள்ளதாக்கு பகுதியான கம்பம்மெட்டு மலையடிவாரத்தையொட்டி பல ஏக்கர் நிலப்பரப்பில் மானாவாரி நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களில் கம்பு, சோளம், எள், தட்டைப்பயறு, மொச்சை, சூரியகாந்தி உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக விவசாயிகள் எதிர்பார்த்த பருவ மழை இல்லாததால் பல பகுதிகளில் மானாவாரி விவசாயம் பெருமளவு பாதிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மழை பெய்தது. இதையடுத்து விவசாயிகள் மானாவாரி நிலங்களில் குறுகிய கால பயிர்களை சாகுபடி செய்துள்ளனர்.

இந்நிலையில் இந்த ஆண்டு கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி எடுத்தது. மேலும் கோடை மழை பெய்யாததால் பயிர்கள் கருகி காணப்பட்டன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கம்பம் சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது. இந்த மழை சுமார் 1 மணி நேரத்துக்கும் மேல் நீடித்தது.

இதனால் கம்பம்மெட்டு அடிவார பகுதிகளில் உள்ள மானாவாரி நிலங்களில் வாடிய நிலையில் இருந்த பயிர்கள் துளிர் விடத் தொடங்கி உள்ளன.

இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Next Story