தமிழகம் அமைதியான முறையில் மத்திய அரசுக்கு ஒத்துழைக்க மறுக்கும் கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு


தமிழகம் அமைதியான முறையில் மத்திய அரசுக்கு ஒத்துழைக்க மறுக்கும் கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு
x
தினத்தந்தி 4 April 2018 11:15 PM GMT (Updated: 4 April 2018 6:46 PM GMT)

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தமிழகம் அமைதியான முறையில் மத்திய அரசுக்கு ஒத்துழைக்க மறுக்கும் என்று திருச்சி பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேசினார்.

திருச்சி,

நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் கட்சி அறிவிப்பு கூட்டத்தை மதுரையில் கடந்த பிப்ரவரி மாதம் 21-ந் தேதி நடத்தினார். அந்த கூட்டத்தில் தனது கட்சிக்கு மக்கள் நீதிமய்யம் என்று பெயர் அறிவித்ததோடு, கட்சியின் கொடியையும் அறிமுகப்படுத்தினார். இதையடுத்து மக்கள் நீதி மய்யத்தின் அடுத்த பொதுக்கூட்டம் திருச்சியில் ஏப்ரல் 4-ந் தேதி நடைபெறும் என்றும் கமல்ஹாசன் அறிவித்தார். பொதுக்கூட்டத்துக்காக திருச்சி பொன்மலை ஜி-கார்னர் மைதானம் தேர்வு செய்யப்பட்டது. அங்கு பிரமாண்ட மேடை அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாநிலம் முழுவதும் இருந்து வரும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், ரசிகர்கள், பெண்கள் அமருவதற்காக தனித்தனியே 14 பிரிவுகளாக இருக்கைகள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் இருவழியாக வந்து செல்லும் வகையில் பாதை அமைக்கப்பட்டது. மேடையின் கீழ் முன்வரிசையில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உட்கார இருக்கைகள் அமைக்கப்பட்டன. திறந்தவெளி மேடையின் பின்புறமும், வலது, இடது புறங்களிலும் பிரமாண்ட எல்.இ.டி. திரையில் மேடையின் நடவடிக்கைகளை ஒளிபரப்பும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

முன்னதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் மாலையில் சென்னையில் இருந்து ரெயில் மூலம் திருச்சி வந்தார். திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி இருந்த அவர், நேற்று இரவு 7.35 மணியளவில் பொதுக்கூட்ட மேடைக்கு வந்தார். அவர் வருவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்பு கமல் எழுதி இசையமைப்பாளர் வித்யாசாகர் இசை அமைத்த “நாளை நமதே, இனி நாளை நமதே” என்ற பாடல் ஒலிபரப்பப்பட்டது.

இதனை தொடர்ந்து மேடையில் கமலை கண்ட ரசிகர்கள், தொண்டர்கள் உற்சாகமாக அவரை பார்த்து கையசைத்தனர். கமல் ரசிகர்களை பார்த்து இருகரம் கூப்பி அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தார். பின்னர் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது கமல்ஹாசன் கொடியை நான் ஏற்றுவதை விட நமது கட்சியை சார்ந்த ஒரு பெண் உறுப்பினர் ஏற்றினால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்தார். இதையடுத்து கூட்டத்தில் இருந்த ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பெண் உறுப்பினர் சஜினா மேடைக்கு வந்து கட்சி கொடியை ஏற்றினார். அப்போது தொண்டர்கள் பலத்த கரகோஷம் எழுப்பினர்.

இதையடுத்து திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற துணை கலெக்டர் வைத்தியநாதன், விமானப்படையில் 20 ஆண்டுகளாக பணியாற்றிய ராஜ்மோகன், வரலாற்று ஆய்வாளர் மருதுமோகன், டாக்டர் சாமுவேல்தேவகுமார், தொழிலதிபர் முகமது பைசல், நடன இயக்குனர் ஷோபி பால்ராஜ், அவரது மனைவி லலிதா ஷோபி உள்பட 7 மாவட்டங்களை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலர் கமல் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர். இதேபோல் கல்லூரி மாணவர்கள் 10 பேரும் மக்கள் நீதிமய்யம் கட்சியில் தங்களை இணைத்து கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் மரக்கன்றுகளை கமல்ஹாசன் வழங் கினார்.

இதையடுத்து கமல்ஹாசன் பேசியதாவது:-

இங்கு நாம் பறக்க வேண்டும் என்று கனவு கண்டால் பறந்து விடலாம். மக்கள் நீதி மய்யம் என்றால் என்ன?. அதை வார்த்தையால் சொல்வதைவிட இங்கு கூடி இருக்கிற மக்களை சுட்டி காட்டுகிறேன். இதுபோல் ஒவ்வொரு ஊர்களிலும் இருக்க வேண்டும். காவிரியில் நமக்குள்ள உரிமைகளை அரசியல்வாதிகள் குளறுபடிகள் செய்து தட்டி பறிக்கிறார்கள். இது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே நடந்து கொண்டு இருக்கிறது. கடந்த 25 அல்லது 30 ஆண்டுகளாக குழப்பம் அதிகரித்து வருகிறது. இப்போது தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்த்த சந்தர்ப்பத்தில் ‘ஸ்கீம்‘ என்றால் என்ன? என்று கேட்டு காலம் தாழ்த்துவது ஒரு சூழ்ச்சி. எதை செய்யக் கூடாது என்று மக்கள் நீதி மய்யம் நினைக்கிறதோ, அதனை இந்த அரசு செய்கிறது.

பத்திரிகையாளர் சந்திப்பின்போது, “நீங்கள் மத்திய அரசுக்கு எதிராக குறைவான அழுத்தம் கொடுக்கிறீர்களே என்று கேட்டார்கள். மத்திய அரசு செய்வது தவறு. இதற்கு மேல் என்ன அழுத்தம் தர வேண்டும். இதற்கு மேல் பேசினால் அது அவமரியாதையாக இருக்கும். அதை மக்கள் நீதிமய்யம் செய்யாது. வெள்ளையனே வெளியே என்று சொன்னால் போதுமானது. வெள்ளையரே வெளியேறுங்கள் என்று சொல்லவில்லையே அல்லது வெள்ளைக்கார நாயே வெளியேறு என்று சொல்ல வேண்டுமா?. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே ஆக வேண்டும். அதனை திசைதிருப் பாதீர்கள்.

எத்தனை கலவரம் ஏற்படுத்தி திசை திருப்பினாலும் அதை எதிர்கொண்டு மீண்டும் கோரிக்கை வைத்து கொண்டே இருப்போம். இங்கு உறங்குபவர்களை எழுப்பி விடலாம். உறங்குவதை போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது. அது செவிடன் காதில் ஊதிய சங்கு போன்றது. காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை நடத்தினார். மத்திய அரசுக்கு சொல்வது இது தான். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காவிட்டால் தமிழகம் அமைதியான முறையில் மத்திய அரசுக்கு ஒத்துழைக்க மறுக்கும். நீங்கள் அறிவுள்ளவர்கள் தான், அறிஞர்கள் தான். யோசித்து பாருங்கள். ஜாக்கிரதை என்று எல்லாம் சொல்ல மாட்டேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் உயர்நிலை குழு உறுப்பினர்கள் நடிகை ஸ்ரீபிரியா, நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர், அருணாச்சலம், கவிஞர் சினேகன், பாரதி கிருஷ்ணகுமார், அகில இந்திய பொறுப்பாளர் தங்கவேல், திருச்சி மாவட்ட பொறுப்பாளர் சுரேஷ், ஜல்லிக்கட்டு பேரவை ராஜேஷ் உள்பட தஞ்சை, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், நாகை உள்பட பல மாவட்டங்களை சேர்ந்த பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story