ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலி: கோம்பை அணையில் ஆக்கிரமிப்பு அகற்றம்
ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலியாக கோம்பை அணையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
கன்னிவாடி,
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் நீலமலைக்கோட்டையில் சோத்தாளநாயக்கன்- கோம்பை அணை உள்ளது. கருப்பிமடம் ஓடை, மாங்கரையாறு உள்ளிட்ட ஓடைகள் மூலம் இந்த அணைக்கு தண்ணீர் வருகிறது. இந்த அணையின் மூலம் சுற்று வட்டார பகுதிகளின் நீர்மட்டம் உயருவதோடு, சுமார் 200 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்த அணையை சிலர், ஆக்கிரமித்து ஆழ்துளை கிணறுகள் அமைத்து தென்னை, கொய்யா, முருங்கை உள்ளிட்டவை சாகுபடி செய்திருந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திலும் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் டி.ஜி. வினய் அதிகாரிகளுடன் சென்று அணையை பார்வையிட்டார். பின்னர் அணையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து ஆக்கிரமிப்பாளர்கள் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரணை செய்த கோர்ட்டு, மாவட்ட கலெக்டர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டது. அதன்பேரில் அவர்கள், நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
வழக்கின் முடிவில் கலெக்டருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. மேலும் அணையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றவும் உத்தரவிட்டது. அணையில் இருந்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று மாவட்ட கலெக்டர் டி.ஜி. வினய் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகளை ஆய்வு செய்தனர். அணையில் உள்ள 1,984 தென்னை மரங் கள், கொய்யா மற்றும் ஆழ்துளை கிணறுகள் அப்புறப்படுத்தப்பட்டன.ஆய்வின் போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுப்பிரமணி, ரெட்டியார்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமார் (கி.ஊ.) சுப்பிரமணி (வ.ஊ.), கன்னிவாடி பேரூராட்சி செயல் அலுவலர் விஜயநாத், தாசில்தார் மிருணாளினி, குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் பாரூக், உதவி செயற்பொறியாளர் பிச்சாண்டி உள்பட அதிகாரிகள் உடன் சென்றனர்.
Related Tags :
Next Story