ஜனதாதளம்(எஸ்), பகுஜன் சமாஜ் கூட்டணி வெற்றிக்கு தொண்டர்கள் பாடுபட வேண்டும் - குமாரசாமி வேண்டுகோள்


ஜனதாதளம்(எஸ்), பகுஜன் சமாஜ் கூட்டணி வெற்றிக்கு தொண்டர்கள் பாடுபட வேண்டும் - குமாரசாமி வேண்டுகோள்
x
தினத்தந்தி 5 April 2018 3:15 AM IST (Updated: 5 April 2018 2:32 AM IST)
t-max-icont-min-icon

ஜனதாதளம்(எஸ்), பகுஜன் சமாஜ் கூட்டணி வெற்றிக்கு தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்று குமாரசாமி வேண்டுகோள் விடுத்தார்.

கொள்ளேகால்,

சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகாலில் ஜனதாதளம்(எஸ்) கட்சியின் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொள்ள வந்த அக்கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும், சித்தராமையாவும் எங்கள் கட்சியை பா.ஜனதாவின் பி-டீம் என்று கூறியுள்ளனர். எங்கள் கட்சியை பற்றி அவர்களுக்கு என்ன தெரியும். தேவையில்லாமல் எங்கள் கட்சியை பற்றி பேசுவதை அவர்கள் நிறுத்த வேண்டும். சீனிவாச பிரசாத், மல்லிகார்ஜூன கார்கே, விஸ்வநாத் ஆகியோர் எல்லாம் இல்லை என்றால் சித்தராமையாவின் அரசியல் வாழ்க்கை எப்போதோ முடிந்து இருக்கும்.

சாம்ராஜ்நகர் மாவட்டம் காங்கிரசின் கோட்டை என்று அந்த கட்சியினர் கூறி வருகின்றனர். ஆனால் தேர்தல் முடிந்த பின்னர் தான் சாம்ராஜ்நகர் யாருடைய கோட்டை என்பது தெரியும்.

நாங்களும், பகுஜன் சமாஜ் கட்சியும் இந்த முறை தேர்தலில் கூட்டணி அமைத்து உள்ளோம். எங்கள் கூட்டணியை வெற்றி பெற வைக்க தொண்டர்கள் பாடுபட வேண்டும். கர்நாடகத்தில் விவசாயிகள் தற்கொலை நாளுக்கு நாள் அதிகரித்து உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக தற்கொலை செய்த விவசாயிகள் வீட்டிற்கு செல்லாத பா.ஜனதாவினரும், காங்கிரசாரும் தற்போது செல்கின்றனர். இதில் இருந்தே அவர்கள் அரசியலுக்காக நாடகம் ஆடுவது தெளிவாக தெரிகிறது.

தேர்தலில் வெற்றி பெற்று ஜனதாதளம்(எஸ்) ஆட்சி அமைத்தால் 24 மணி நேரத்தில் விவசாயிகள் கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் என அவர் கூறினார்.

Next Story