ராசிபுரத்தில் ரெயில் மறியல்: தி.மு.க. எம்.எல்.ஏ. உள்பட 201 பேர் கைது


ராசிபுரத்தில் ரெயில் மறியல்: தி.மு.க. எம்.எல்.ஏ. உள்பட 201 பேர் கைது
x
தினத்தந்தி 5 April 2018 4:15 AM IST (Updated: 5 April 2018 2:46 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி பள்ளிபாளையம், ராசிபுரத்தில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க. எம்.எல்.ஏ. உள்பட 201 பேர் கைது செய்யப்பட்டனர். நாமக்கல்லில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பள்ளிபாளையம்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கோரியும் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள ஆனங்கூர் ரெயில் நிலையத்தில் நேற்று மறியல் போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அங்கு வந்த ஈரோடு - ஜோலார்பேட்டை பயணிகள் ரெயில் மறிக்கப்பட்டது.

இந்த மறியல் போராட்டத்தில் நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.எஸ்.மூர்த்தி எம்.எல்.ஏ., திருச்செங்கோடு நகர செயலாளர் நடேசன், ஒன்றிய செயலாளர் வட்டூர் தங்கவேல், எலச்சிபாளையம் ஒன்றிய செயலாளர் தங்கவேல், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மதுரா செந்தில், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் ஜிதேந்திரன், மாவட்ட துணை செயலாளர் சுகந்தி மணியம், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் மொளசி ராஜமாணிக்கம் உள்பட காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து ரெயில் மறியலில் ஈடுபட்ட கே.எஸ்.மூர்த்தி எம்.எல்.ஏ. மற்றும் 3 பெண்கள் உள்பட மொத்தம் 180 பேரை பள்ளிபாளையம் போலீசார் கைது செய்தனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ராசிபுரத்தில் ரெயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது. ரெயில் நிலையம் அருகிலுள்ள காளியம்மன் கோவிலில் இருந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நகர செயலாளர் மணிமாறன் தலைமையில் ஊர்வலமாக சென்றனர். அப்போது அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ரெயில் நிலையம் அருகில் சென்றபோது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் அவர்கள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ரெயில் மறியலுக்கு முயற்சித்ததாக அவர்களை ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரமூர்த்தி தலைமையில் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயற்சித்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர்கள் ஜெயராமன் (எலச்சிபாளையம்), கோவிந்தசாமி (வெண்ணந்தூர்), வெண்ணந்தூர் ஒன்றிய பொருளாளர் ஜெயபால், வெண்ணந்தூர் ஒன்றிய துணை செயலாளர் முருகேசன், எலச்சிபாளையம் ஒன்றியக்குழு ஆனந்தன், மங்களபுரம் கிளை செயலாளர் பானுமதி உள்பட 21 பேரை ராசிபுரம் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் ரோட்டரி ஹாலில் தங்க வைக்கப்பட்டனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து நாமக்கல் ரெயில் நிலையத்தில் நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையொட்டி போராட்டத்துக்கு வந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நிர்வாகிகளை போலீசார் மறியல் செய்ய அனுமதிக்கவில்லை. எனவே பிளாட்பாரத்தில் நின்று கொண்டு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நகர செயலாளர் தம்பிராஜா தலைமை தாங்கினார். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நிர்வாகிகள் கொழந்தான், ஜீவாதாசன், ஜீவானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இவர்கள் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story