கிருஷ்ணகிரியில் புதுவாழ்வு திட்ட பணியாளர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


கிருஷ்ணகிரியில் புதுவாழ்வு திட்ட பணியாளர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 April 2018 4:00 AM IST (Updated: 5 April 2018 2:47 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் புதுவாழ்வு திட்ட பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், மாவட்ட தமிழ்நாடு புதுவாழ்வு திட்ட அனைத்து பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட கவுரவ தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்புரையாற்றினார்.

மாவட்ட தலைவர் பாஸ்கரன், மாவட்ட செயலாளர் அன்பழகன், மாவட்ட துணைத் தலைவர் நாதவள்ளி, முன்னாள் உதவி திட்ட மேலாளர்கள் சிவலிங்கம், சுதாகர், அருண்குமார், முன்னாள் அணித்தலைவர் அருள்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் கருப்பண்ணன் கோரிக்கை விளக்கவுரையாற்றினார்.

நிரந்தர பணி

ஆர்ப்பாட்டத்தின் போது, ஐகோர்ட்டு வழிகாட்டுதலின்படி அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். 12 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனைத்து பணியாளர்களுக்கும் அரசின் நிரந்தர பணி வழங்க வேண்டும். கடந்த 2017 ஜூன் மாதம் முதல் 2018 மார்ச் மாதம் வரை வேலையில்லாமல் இருக்கும் அனைத்து பணியாளர்களுக்கும் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள ஈட்டிய விடுப்பு தொகையை உடனே வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் மாவட்ட பொருளாளர் அசோகன் நன்றி கூறினார். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். 

Next Story