உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 5 பேருக்கு நவீன சிகிச்சை டாக்டர்கள் சாதனை


உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 5 பேருக்கு நவீன சிகிச்சை டாக்டர்கள் சாதனை
x
தினத்தந்தி 5 April 2018 4:15 AM IST (Updated: 5 April 2018 2:49 AM IST)
t-max-icont-min-icon

உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 5 பேருக்கு, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி டாக்டர்கள் நவீன சிகிச்சை அளித்து சாதனை படைத்துள்ளனர்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் கல்லீரல், இரைப்பை, குடல், கணையம் நலப்பிரிவு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த பிரிவில் சிறப்பு சிகிச்சைப்பிரிவு மருத்துவராக பாப்பி ரிஜாய்ஸ் உள்ளார்.

இங்கு உணவுக்குழாயில் புற்றுநோய் ஏற்பட்டு எச்சில்கூட விழுங்க முடியாமல் அவதிப்படும் நோயாளிகளுக்கு மூடப்பட்ட உணவுக்குழாய் பாதையை திறந்துவிடும் “உணவுக்குழாய் ஸ்டென்ட்“ என்ற நவீன கருவி மூலம் முதல்முறையாக நவீன சிகிச்சை அளித்து டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.

இதுதொடர்பாக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி டீன் டாக்டர் ராதாகிருஷ்ணன், நவீன சிகிச்சையை மேற்கொண்ட பாப்பி ரிஜாய்ஸ் ஆகியோர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

இங்கு கல்லீரல், இரைப்பை, குடல், கணையம் நலப்பிரிவு தொடங்கப்பட்டபிறகு உயரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உணவுக்குழாய் புற்றுநோய் ஏற்படும்போது உணவு உண்பதற்கு மிகவும் சிரமம் ஏற்படுகிறது. சிலர் நீர் ஆகாரம், எச்சில்கூட விழுங்க முடியாமல் மிகவும் பரிதவிப்புக்கு ஆளாகும் நிலை ஏற்படும். அப்படிப்பட்ட நோயாளிகளுக்கு இதுவரை அவர்களுக்கு குழாய் மூலம் நீர் ஆகாரம் மட்டுமே உண்பதற்கு வகை செய்யப்பட்டு வந்தது. ஆனால் இப்போது உணவுக்குழாயில் நவீன சிகிச்சை மூலம் “ஸ்டென்ட்“ என்ற கருவியை பொருத்தி திட உணவு உண்பதற்கு வகை செய்யப்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் எடை அதிகரிப்பதுடன், அவர்கள் கீமோ மற்றும் கதிரியக்க சிகிச்சைக்கு விரைவில் தயார் ஆகின்றனர்.

உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள நெடுங்குளம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ஆறுமுகம் (வயது 60), நெல்லை மாவட்டத்தை சேர்ந்த கனி, குற்றாலம், குமரி மாவட்டத்தை சேர்ந்த தங்கநாடார், சரஸ்வதி ஆகிய 5 பேருக்கு “ஸ்டென்ட்“ கருவி பொருத்தப்பட்டுள்ளது. தண்ணீர் விழுங்கக்கூட கஷ்டப்பட்ட இந்த 5 பேரும் தற்போது திட உணவை உட்கொள்கின்றனர்.

இதுபோன்ற நவீன சிகிச்சை மதுரை போன்ற பகுதிகளில்தான் மேற்கொள்ளப்படுகிறது. தனியார் மருத்துவமனையில் இந்த நவீன சிகிச்சை பெற ரூ.1 லட்சம் வரை செலவாகும். ஆனால் நோயாளிகள் 5 பேருக்கும் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் இலவசமாக செய்யப்பட்டுள்ளது.

ஸ்டென்ட் கருவி, எண்டோஸ்கோப்பி மூலம் உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் உணவு குழாயில் உணவு செல்ல பாதையை ஏற்படுத்தும் வகையில் பொருத்தப்படுகிறது. இதன்மூலம் அடைபட்டுக்கிடக்கும் உணவுக்குழாய் திறந்து உணவுகள் சீராக உடலுக்குள் செல்ல வழிவகை ஏற்படுகிறது. ஸ்டென்ட் கருவி ஒரு வகை மெட்டலால் ஆன வலைபோன்றது. இதை பொருத்தியபிறகு எடுக்க வேண்டியது இல்லை. உடலில் இருப்பதால் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படாது.

மேலும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் கல்லீரல் மற்றும் குடல் நலத்துறையில் ரத்த வாந்தி எடுப்போருக்கு ரத்த குழாயில் வளையம் போடுதல், பித்த நீர் குழாய் கல்லடைப்புக்கு இ.ஆர்.சி.பி. என்ற நவீன சிகிச்சை மூலம் கல்நீக்குதல் போன்ற பல்வேறு சிறப்பு சிகிச்சைகளும் செய்யப்படு கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த நவீன சிகிச்சை மூலம் குணமடைந்த நோயாளி ஆறுமுகம் கூறும்போது, “நான் முதலில் எச்சில்கூட விழுங்க முடியாத நிலையில் இந்த ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்து சேர்ந்தேன். இங்கு அளிக்கப்பட்ட நவீன சிகிச்சைக்குப்பிறகு நான் தற்போது என்னால் எது வேண்டுமானாலும் சாப்பிட முடிகிறது. நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். அதற்காக எனக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், உதவிய டாக்டர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள் கிறேன்” என்றார்.

பேட்டியின்போது மருத்துவத்துறை தலைவர் பிரின்ஸ் பயஸ், அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி உதவி உறைவிட மருத்துவ அதிகாரிகள் கலைக்குமார், ரெனிமோல் ஆகியோர் உடன் இருந்தனர். 

Next Story