மணல் திருட்டை தடுக்க கோரி காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தினர் மனு


மணல் திருட்டை தடுக்க கோரி காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தினர் மனு
x
தினத்தந்தி 5 April 2018 4:15 AM IST (Updated: 5 April 2018 2:50 AM IST)
t-max-icont-min-icon

நஞ்சை தோட்டக்குறிச்சி முதல் நெரூர் வரை காவிரி ஆற்றில் மணல் திருட்டை தடுக்க கோரி காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தினர், கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

கரூர்,

காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் விசுவநாதன் தலைமையில் நிர்வாகிகள் பலர் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர். அப்போது அவர்கள், மணல் திருட்டை தடுக்கக்கோரி வாசகங்கள் எழுதிய தாளை கையில் தூக்கிப்பிடித்தபடி வந்தனர். கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் இல்லாததால், நேர்முக உதவியாளரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருந்ததாவது:-

கரூர் மாவட்டத்தில் மண்மங்கலம் அருகே நஞ்சை தோட்டக்குறிச்சி முதல் நெரூர் வரை காவிரி ஆற்றில் தினமும் மணல் திருட்டு நடந்து கொண்டிருக்கிறது. தினமும் 1,750 மாட்டு வண்டிகளிலும், 175 மணல் லாரிகளிலும் இரவு 8 மணியில் இருந்து அதிகாலை 4 மணி வரை மணல் திருடப்படுகிறது. இது குறித்து அதிகாரிகளிடமும், கனிம வளத்துறையினரிடமும் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை

கடம்பங்குறிச்சி, தோட்டக்குறிச்சி பகுதியில் காவிரி ஆற்றில் மணல் அள்ளியதன் விளைவாக நிலத்தடி நீர் உவர் நீராக மாறிவிட்டது. காவிரி ஆற்றின் கரையை உடைத்து நஞ்சை தோட்டக்குறிச்சி பகுதியில் இரவு நேரத்தில் பொக்லைன் மூலம் மணல் அள்ளப்பட்டு வருகிறது. தோட்டக்குறிச்சி, கடம்பங்குறிச்சி, நன்னியூர் கிராமங்களில் 150 இடங்களில் மணல் இருப்பு உள்ளது. இதில் 3 ஆயிரம் யூனிட் மணல் இருக்கும். மணல் இருக்கும் இடம் தெரிந்தும் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.

எனவே காவிரி ஆற்றில் மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீதும், அவர்களுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகள் மீதும் சட்ட நடவடிக்கை எடுத்து காவிரி ஆற்றை பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

மனுவை பெற்ற நேர்முக உதவியாளர், கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறினார். 

Next Story