முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு காளைகள் முட்டியதில் 10 பேர் காயம்


முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு காளைகள் முட்டியதில் 10 பேர் காயம்
x
தினத்தந்தி 4 April 2018 10:45 PM GMT (Updated: 4 April 2018 9:20 PM GMT)

இருந்திரப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 10 பேர் காயமடைந்தனர்.

அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே உள்ள இருந்திரப்பட்டியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவையொட்டி நேற்று காலை ஜல்லிக்கட்டு நடைபெற்றது. ஜல்லிக்கட்டை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கலெக்டர் கணேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

முதலில் வாடிவாசலில் இருந்த கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இந்த காளையை மாடுபிடி வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, கரூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மொத்தம் 695 காளைகள் வாடிவாசலில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. அந்த காளைகள் சீறிபாய்ந்து வந்தன.

10 பேர் காயம்

அந்த காளைகளை 200-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்க முயன்றனர். இதில் சில காளைகள் மாடுபிடி வீரர்களை தூக்கி வீசியும், காலால் மிதித்தும் ஓடின. பல காளைகளை மாடுபிடி வீரர்கள் பிடித்தனர். காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் லெட்சுமணப்பட்டி விஜய்(வயது 20), சரத் (22), இ.மேட்டுப்பட்டி ஜெயபால் (22), விஜயக்குமார் (26), பார்வையாளர்கள் முத்துடையான்பட்டி தெய்வமணி (20), தென்னங்குடி விஜயன் (50) உள்பட 10 பேர் காயமடைந்தனர்.

அவர்களுக்கு ஜல்லிக்கட்டு நடைபெற்ற இடத்தில் இருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். அவர்களில் படுகாயமடைந்த 2 பேர் அங்கு தயார் நிலையில் இருந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

பாதுகாப்பு

ஜல்லிக்கட்டை மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெயபாரதி, இருந்திரப்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வந்திருந்தவர்கள் கண்டு ரசித்தனர்.

புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் தலைமையில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், துணை போலீஸ் சூப்பிரண்டு கோபாலச்சந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மங்கையர்கரசி, சுமதி உள்பட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முன்னதாக அனைத்து காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களை மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்த பின்னரே அனுமதித்தனர். 

Next Story