அரியலூர் மாவட்டங்களில் புதுவாழ்வு திட்ட பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


அரியலூர் மாவட்டங்களில் புதுவாழ்வு திட்ட பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 April 2018 4:15 AM IST (Updated: 5 April 2018 2:51 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டங்களில் புதுவாழ்வு திட்ட பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர்,

பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு புதுவாழ்வு திட்ட பணியாளர் நலச்சங்கம் சார்பில் பெரம்பலூர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சந்திரமோகன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் அரசு, மாவட்ட பொருளாளர் புஷ்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, 12 ஆண்டுகள் உழைத்த புதுவாழ்வு திட்ட பணியாளர்களுக்கு 10 மாதங்களாக வேலை இல்லை, ஊதியமும் இல்லை. இதனால் வறுமையில் வாடுகின்றனர். எனவே உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்படி அனைவருக்கும் வேலை வழங்கிட வேண்டும்.

12 ஆண்டுகள் அனுபவத்தை கணக்கில் வைத்து டி.என்.ஆர்.டி.பி. திட்டத்தில் எவ்வித நிபந்தனையுமின்றி அனைத்து பணியாளர்களுக்கும் பணி வழங்கிட வேண்டும். 2017 ஜூன் முதல் 2018 மார்ச் வரை வேலையில்லாமல் இருக்கும் பணியாளர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கிட வேண்டும். நிலுவையிலுள்ள ஈட்டிய விடுப்புத்தொகையையும் உடனே வழங்கிட வேண்டும். பெரம்பலூர், தர்மபுரி, அரியலூர் ஆகிய பின்தங்கிய மாவட்டங்களில் டி.என்.ஆர்.டி.பி. திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்து ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் குமரகுருபரன் உள்பட புதுவாழ்வு திட்ட பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அரியலூரில்...

இதேகோரிக்கையை வலியுறுத்தி அரியலூர் அண்ணாசிலை அருகே தமிழ்நாடு புதுவாழ்வு திட்ட அனைத்து பணியாளர்கள் நலச்சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட இணைச்செயலாளர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழில் கல்வி ஆசிரியர் சங்க நிறுவன தலைவர் நல்லப்பன் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். முடிவில் பொதுக்குழு உறுப்பினர் பரிமளம் நன்றி கூறினார்.


Next Story