பெத்தான்பிள்ளை குடியிருப்பில் சிறுத்தை அட்டகாசம்


பெத்தான்பிள்ளை குடியிருப்பில் சிறுத்தை அட்டகாசம்
x
தினத்தந்தி 4 April 2018 10:30 PM GMT (Updated: 4 April 2018 9:50 PM GMT)

கடையம் அருகே பெத்தான்பிள்ளை குடியிருப்பில் சிறுத்தை அட்டகாசம் செய்து வருகிறது. அங்குள்ள தொழிலாளி ஒருவருடைய வீட்டில் இருந்த நாயை சிறுத்தை தூக்கி சென்றதால் கிராம மக்கள் மத்தியில் அச்சம் அடைந்து உள்ளனர்.

கடையம், 

மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கடனாநதி அணை அடிவார கிராமமான பெத்தான்பிள்ளை குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அடிக்கடி கிராமத்துக்குள் சிறுத்தை புகுந்து நாய், ஆடு போன்றவற்றை தூக்கி சென்று விடுகிறது. சிறுத்தை நடமாட்டம் தொடர்வதால், கிராம மக்கள் இரவில் வெளியே நடமாட அச்சப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்த கூலி தொழிலாளியான வள்ளிராஜ் வீட்டில் வளர்த்துவந்த நாயை நேற்று காணவில்லை. அந்த நாயை தேடி பார்த்த போது அந்த பகுதியில் சிறுத்தை தடம் இருந்தது. இது குறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

கடையம் வனச்சரக வனக்காப்பாளர் சுந்தரேசன் உள்ளிட்டோர் அந்த கிராமத்துக்கு சென்று பார்வையிட்டனர். சிறுத்தை வந்து நாயை தூக்கி சென்றதை அவர்கள் உறுதி செய்தனர். அந்த கிராம பகுதியில் தொடர்ந்து இரவு ரோந்துப் பணியில் ஈடுபடுவதாகக் கூறிச் சென்றனர். இந்தப் பகுதியில் தொடர்ந்து சிறுத்தை, யானை உள்ளிட்ட வனவிலங்குகளால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். விலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவதை தடுக்கு வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க வேண்டும் என அந்தக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story