குரங்கணி தீ விபத்து அறிக்கை 2 மாதங்களில் சமர்ப்பிக்கப்படும் முதன்மைசெயலாளர் அதுல்ய மிஸ்ரா பேட்டி
குரங்கணி மலையில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்த ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்களின் குடும்பத்தினரிடம் நேற்று விசாரணை நடத்திய அதிகாரி அதுல்ய மிஸ்ரா, இன்னும் 2 மாதங்களில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றார்.
ஈரோடு,
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி மலைப்பகுதியில் கடந்த மார்ச் மாதம் 11-ந் தேதி காட்டுத்தீ பிடித்தது. இதில் குரங்கணி மலைப்பகுதியில் மலையேற்றத்துக்காக சென்றிருந்த பலரும் சிக்கினார்கள். இந்த விபத்தில் தீயில் கருகி படுகாயம் அடைந்த 22 பேர் இதுவரை உயிரிழந்து உள்ளனர். தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த தமிழ்நாடு அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அரசு முதன்மை செயலாளர் அதுல்ய மிஸ்ரா நியமிக்கப்பட்டு உள்ளார்.
குரங்கணி தீ விபத்து தொடர்பான விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட பின்னர் அவர் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று இதுபற்றி தீவிர விசாரணை நடத்தி வருகிறார். காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் சொந்த ஊர்களுக்கும் சென்று அவர் விசாரணை நடத்துகிறார். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் 6 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தும் வகையில் விசாரணை அதிகாரி அதுல்ய மிஸ்ரா நேற்று ஈரோடு வந்தார்.
ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விசாரணை நடந்தது.
முன்னதாக விசாரணை அதிகாரி அதுல்ய மிஸ்ரா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
குரங்கணி தீவிபத்து தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசு விசாரணை ஆணையம் அமைத்து என்னை விசாரணை அதிகாரியாக நியமித்த உடன் மார்ச் 21-ந் தேதியே அங்கு சென்றேன். 22-ந் தேதி குரங்கணி மலையில் தீ விபத்து நடந்த இடத்துக்கு நேரில் சென்றேன். குரங்கணி, குடகுமலை, டாப் ஸ்டேசன், சென்ட்ரல் ஸ்டேசன் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டேன். அங்குள்ள பொதுமக்கள், பசுமை சுற்றுலா மேலாண்மைக்குழு உள்ளிட்ட 72 பேரிடம் விசாரணை நடத்தினேன்.
எங்கள் விசாரணையில் இந்த விபத்து எப்படி ஏற்பட்டது?. விபத்துக்கான காரணம் என்ன? இதில் யார் தவறு செய்தது?, மலையேற்றத்துக்கு பொதுமக்களை அழைத்து வந்தவர்கள் முறையாக அனுமதி பெற்று அழைத்து வந்தனரா? இதில் ஏதேனும் தவறு நடந்து உள்ளதா? வன இலகாவினர் தவறு செய்து உள்ளனரா?. இதுபோன்ற விபத்துகள் தொடர்ந்து நடக்காமல் இருக்க பரிந்துரைகள் என்ன? என்பது போன்ற கேள்விகளை முன்வைத்து விசாரணை நடந்தது. கடந்த 2-ந் தேதி சென்னையில் மலையேற்ற குழுவினரை அழைத்துச்செல்லும் ஒருங்கிணைப்பாளர்கள் 2 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் எப்படி மக்களை ஒருங்கிணைக்கிறார்கள்?. யாரிடம் அனுமதி பெறுகிறார்கள்? என்பது பற்றி விசாரிக்கப்பட்டது. அதன்பிறகு பல்வேறு தரப்பட்ட மலை ஏற்ற நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள், ஒருங்கிணைப்பாளர்களிடமும் இதுபற்றி விசாரித்து ஆலோசனைகள் செய்தோம். மலையேற்ற கிளப்புகள் நடத்துபவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு இருக்கிறது. பொள்ளாச்சியில் மலையேற்ற நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் அமைப்புகள் 2 உள்ளன. அதன் நிர்வாகிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது. தற்போது ஈரோட்டில் விசாரணை நடைபெறுகிறது. இந்த விசாரணையை முழுமையாக முடித்து இன்னும் 2 மாதத்தில் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.
இது குரங்கணி தீவிபத்து தொடர்பான தனிப்பட்ட விசாரணை ஆணையம். இதற்கும் நீதிமன்ற விசாரணைக்கும் தொடர்பு இல்லை. அது தனியாகவும், இது தனியாகவும் நடைபெறும். எங்களது விசாரணையில் தீவிபத்து எப்படி ஏற்பட்டது என்பது தொடர்பான ஒரு தகவல் கிடைத்து இருக்கிறது. அதையும் அறிக்கையில் கூற இருக்கிறேன். ஒரு இடத்தில் நெருப்பு பற்ற வேண்டும் என்றால் எரியும் பொருள், ஆக்சிஜன் இவற்றுடன் ஒரு தீப்பொறி ஆகியவை வேண்டும். அங்கு எரிபொருள் இருந்திருக்கிறது. ஆக்சிஜனும் இருந்தது. ஆனால் அந்த தீப்பொறி எங்கிருந்து வந்தது என்பதுதான் கேள்வியாக உள்ளது.
சென்னிமலையை சேர்ந்த மலையேற்ற ஒருங்கிணைப்பாளர் பிரபு போலீஸ் காவலில் உள்ளார். தேவைப்பட்டால் இந்த வாரத்தில் அவரிடம் விசாரணை மேற்கொள்வேன்.
ஈரோடு மாவட்டத்தில் இருந்து குரங்கணி சென்று தீவிபத்தில் உயிரிழந்த கவுந்தப்பாடியை சேர்ந்த திவ்யா, கண்ணன், விவேக், தமிழ்ச்செல்வன், கங்காபுரத்தை சேர்ந்த ரா.சதீஸ்குமார், கொடுமுடி அருகே உள்ள வட்டக்கல்வலசு பகுதியை சேர்ந்த திவ்யா ஆகிய 6 பேரின் குடும்பத்தை சேர்ந்தவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. சென்னிமலை பிரபுவின் பெற்றோரும் வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.
விசாரணை அதிகாரி அதுல்ய மிஸ்ரா தலைமையில் தலைமை வன பாதுகாவலர் (வன உயிரின பிரிவு) ஏ.உதயன், ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆர்.சிவக்குமார், தலைமை வனப்பாதுகாவலர் அன்வர்தீன் ஆகியோர் உடன் இருந்தனர். ஈரோடு மாவட்ட வருவாய் அதிகாரி ச.கவிதா, பயிற்சி கலெக்டர் விசுமகாராஜன், ஈரோடு ஆர்.டி.ஓ. நர்மதாதேவி, கோபி ஆர்.டி.ஓ. கோவிந்தராஜன், தாசில்தார் அமுதா மற்றும் குரங்கணி மலை தீவிபத்து பகுதிக்கு ஈரோட்டில் இருந்து சென்று வந்த சப்-இன்ஸ்பெக்டர் சகாதேவன் ஆகியோர் உடன் இருந்தனர். விசாரணை நடத்தப்பட்ட ஒவ்வொருவரும் கூறிய விஷயங்கள் வீடியோவில் பதிவு செய்யப்பட்டன.
விசாரணைக்கு பின்னர் தன்னார்வலர்கள், மலையேற்ற குழு ஒருங்கிணைப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் ஈரோடு யூத் ஹாஸ்டல் ஒருங்கிணைப்பாளர் ஆ.ராஜா மற்றும் சிலர் கலந்து கொண்டனர்.
இந்த விசாரணையில் தீவிபத்தில் காயம் அடைந்த ஈரோடு செந்தூர் கார்டன் பகுதியை சேர்ந்த சபீதா கலந்து கொள்ள முடியவில்லை. 20 சதவீதம் காயத்துடன் வீட்டில் ஓய்வில் இருக்கும் அவரையும், விபத்தில் காயமின்றி தப்பிய அவருடைய மகள் நேகலா(வயது 9) என்பவரையும் அவர்களின் வீட்டுக்கு நேரில் சென்று விசாரணை அதிகாரி அதுல்ய மிஸ்ரா தலைமையிலான அதிகாரிகள் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்கள். மேலும், அவரிடம் மலையேற்ற குழுவினருடன் இணைந்தது, தீவிபத்து ஏற்பட்ட போது நடந்த சம்பவங்கள், பலரின் உயிரிழப்புக்கான காரணங்கள், மலையேற்ற ஒருங்கிணைப்பாளரின் செயல்பாடு ஆகியவை குறித்தும் அதிகாரிகள் கேட்டு, பதிவு செய்து கொண்டனர். பின்னர் அங்கிருந்து விசாரணை அதிகாரி காங்கேயம் புறப்பட்டு சென்றார்.
Related Tags :
Next Story