புதுவை அரசு சாலை போக்குவரத்து கழக ஒப்பந்த டிரைவர், கண்டக்டர்களுக்கு சம்பள உயர்வு


புதுவை அரசு சாலை போக்குவரத்து கழக ஒப்பந்த டிரைவர், கண்டக்டர்களுக்கு சம்பள உயர்வு
x
தினத்தந்தி 5 April 2018 4:16 AM IST (Updated: 5 April 2018 4:16 AM IST)
t-max-icont-min-icon

புதுவை அரசு சாலை போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் ஒப்பந்த டிரைவர், கண்டக்டர்களுக்கு சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் டிரைவருக்கு ரூ.2,950-ம், கண்டக்டர்களுக்கு ரூ. 3,300 கூடுதலாக கிடைக்கும்.

புதுச்சேரி,

புதுவை அரசின் சார்பு நிறுவனமான சாலை போக்குவரத்து கழகத்தில்(பி.ஆர்.டி.சி.) நிரந்தர டிரைவர், கண்டக்டர்களை நியமிக்காமல் 300-க்கும் மேற்பட்டவர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். அவர்களில் டிரைவர்களுக்கு ரூ.7,500, கண்டக்டர்களுக்கு ரூ.7 ஆயிரம் என மாத ஊதியமாக வழங்கப்படுகிறது. இந்தநிலையில் அவர்கள் தங்களுக்கு புதுவை அரசின் குறைந்தபட்ச ஊதியத்தை வழங்கவேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்து இருந்தனர்.

இதுதொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் ஷாஜகான் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் புதுவை அரசு சாலை போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் குமார், பொது மேலாளர் கிஷோர்குமார் மற்றும் அதிகாரிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள், டிரைவர், கண்டக்டர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஒப்பந்த டிரைவர், கண்டக்டர்களின் சம்பளத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

போக்குவரத்துத்துறை அமைச்சரிடம் பி.ஆர்.டி.சி. சங்க பிரதிநிதிகள் கடந்த 3-ந் தேதி நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில் ஒப்பந்த டிரைவர், கண்டக்டர்களுக்கு சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. டிரைவர்களுக்கு மாதம் ரூ.7,500ல் இருந்து ரூ.10,450 ஆகவும், கண்டக்டர்களுக்கு மாதம் ரூ.7 ஆயிரத்தில் இருந்து ரூ.10,300 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ஊதியம் தொடர்பாக டிரைவர், கண்டக்டர்கள் தலைமை அலுவலகம், பணிமனை பிரிவு அல்லது பொது இடத்தில் போராட்டம் நடத்தக்கூடாது. இதன்மூலம் டிரைவருக்கு ரூ.2,950-ம், கண்டக்டர்களுக்கு ரூ. 3,300 கூடுதலாக கிடைக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
1 More update

Next Story