பகலில் வீடுகளை நோட்டமிட்டு திருடியவர் கைது; 9 பவுன் நகை பறிமுதல்


பகலில் வீடுகளை நோட்டமிட்டு திருடியவர் கைது; 9 பவுன் நகை பறிமுதல்
x
தினத்தந்தி 6 April 2018 3:45 AM IST (Updated: 6 April 2018 12:23 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் பல இடங்களில் பகலில் குப்பை சேகரிப்பது போல வீடுகளை நோட்டமிட்டு திருடியவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 9 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பிராட்வே,

சென்னை யானைகவுனி அக்ரகார தெருவில் உள்ள சில வீடுகளில் கடந்த பிப்ரவரி மாதம் பகல் நேரத்தில் நகைகள் கொள்ளை யடிக்கப்பட்டது. இதுகுறித்து வீட்டு உரிமையாளர்கள் கொடுத்த புகாரின்பேரில் யானைகவுனி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜூலியஸ் சீசர் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

சம்பந்தப்பட்ட வீடுகளில் இருந்த கண்காணிப்பு கேமராவில் கொள்ளையனின் முகம் பதிவாகி இருந்தது. அதனை வைத்து போலீசார் கொள்ளையனை தேடிவந்தனர். சில வாரங்கள் முன்பு தேனாம்பேட்டை, தியாகராயநகர் பகுதிகளில் சில வீடுகளில் இதேபோல் பகலில் பொருட்கள் கொள்ளைபோனது.

இதுகுறித்து தகவல் அறிந்த தனிப்படை போலீசார், கொள்ளை நடந்த வீடுகளில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை சோதனை செய்ததில் கொள்ளையில் ஈடுபட்டது ஒரே நபர் தான் என தெரிந்தது. விசாரணையில் பட்டினப்பாக்கம் பகுதியில் ஏற்கனவே ஒரு கொள்ளை வழக்கில் சில மாதங்களுக்கு முன்பு சக்திவேல்(வயது 25) என்பவர் கைதானதும், அவர் தான் இந்த கொள்ளை சம்பவத்திலும் ஈடுபட்டது தெரியவந்தது.

பட்டினப்பாக்கம் போலீசார் உதவியுடன் தனிப்படை போலீசார் சக்திவேல் பதுங்கி இருந்த தரமணி பகுதிக்கு சென்று பிடிக்க முயன்றனர். போலீசாரை பார்த்த சக்திவேல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். ரகசிய தகவலின் பேரில் சம்பவத்தன்று மெரினா கடற்கரையில் திரிந்த சக்திவேலை போலீசார் சுற்றிவளைத்து கைதுசெய்தனர்.

சென்னையின் பல பகுதிகளிலும் சக்திவேல் பகலில் குப்பை சேகரிப்பதுபோல சென்று நோட்டமிட்டு பூட்டிய வீடுகள் மற்றும் ஆட்கள் இல்லாத வீடுகளில் நுழைந்து பணம், நகை உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து வந்தது தெரியவந்தது. போலீசார் சக்திவேலிடம் இருந்து 9 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். 

Next Story