கூடலூரில் காட்டு யானை தாக்கி இறந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி


கூடலூரில் காட்டு யானை தாக்கி இறந்த  தொழிலாளியின் குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி
x
தினத்தந்தி 5 April 2018 10:00 PM GMT (Updated: 5 April 2018 6:55 PM GMT)

கூடலூரில் காட்டு யானை தாக்கி இறந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்பட்டது.

கூடலூர்,

கூடலூர் பகுதியில் கோடை வறட்சியால் வனத்தில் பசுந்தீவன தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து வாழை, பாக்கு, தென்னை உள்ளிட்ட பயிர்களை தின்று சேதப்படுத்தி வருகிறது. பொதுவாக கூட்டமாக காணப்படும் காட்டு யானைகளால் மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படுவது இல்லை. தனியாக நிற்கும் காட்டு யானை பொதுமக்களை எளிதாக தாக்கி விடுகிறது. இதில் பலர் உயிரிழந்து உள்ளனர்.

கூடலூர் நகராட்சிக்குட்பட்ட ஏழுமரம் பகுதியை சேர்ந்த பழனி என்பவரின் மகன் விஜயகுமார் (வயது 39) தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். கூலி தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு அதே பகுதியில் உள்ள அம்மன் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது தோட்டத்துக்குள் மறைந்து இருந்த காட்டு யானை ஒன்று பிளிறியவாறு திடீரென ஓடி வந்து விஜயகுமாரை தாக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இந்த சமயத்தில் அப்பகுதியில் யாரும் இல்லை. இருப்பினும் காட்டு யானையின் பிளிறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் பொதுமக்கள் வந்தனர். அப்போது காட்டு யானை தாக்கி விஜயகுமார் ஆபத்தான நிலையில் இருப்பதை கண்ட பொதுமக்கள் அவரை மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் விஜயகுமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதை கண்ட அவரின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விஜயகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் உடல் நேற்று ஒப்படைக்கப்பட்டது.

இதனிடையே காட்டு யானை அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். பின்னர் ஆர்.டி.ஓ. முருகையன், தாசில்தார் ரவி, முன்னாள் அமைச்சர் அ.மில்லர், உதவி வன பாதுகாவலர் விஜயன் ஆகியோர் நேரில் வந்து பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ஆறுதல் கூறினர்.

பின்னர் காட்டு யானை நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். தொடர்ந்து விஜயகுமாரின் குடும்பத்துக்கு ஆர்.டி.ஓ. முருகையன் முதற்கட்டமாக ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கி ஆறுதல் கூறினார்.

மீதமுள்ள தொகை ரூ.3½ லட்சம் உரிய ஆவணங்களை சமர்ப்பித்த உடன் வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story