டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கேரள அரசு பஸ் தொழிற்சாலைக்குள் புகுந்தது


டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கேரள அரசு பஸ் தொழிற்சாலைக்குள் புகுந்தது
x
தினத்தந்தி 6 April 2018 3:30 AM IST (Updated: 6 April 2018 12:46 AM IST)
t-max-icont-min-icon

டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கேரள அரசு பஸ் தொழிற்சாலைக்குள் புகுந்தது. இதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதற்கிடையில் மர்ம நபர்கள் கல் வீசியதாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி புதிய பஸ் நிலையத்தில் இருந்து பாலக்காட்டிற்கு கேரள அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சை பாலக்காடு மாவட்டம் பல்லேகாடு பகுதியை சேர்ந்த டிரைவர் ஜெயன் (வயது 53) என்பவர் ஓட்டினார். கண்டக்டராக பாலக்காட்டை சேர்ந்த சுரேஷ் (42) என்பவர் இருந்தார். பஸ்சில் 31 பயணிகள் இருந்தனர்.

இந்த நிலையில் பொள்ளாச்சி அருகே பாலக்காடு ரோட்டில் நல்லூர் பிரிவை தாண்டி, ஜமீன் முத்தூர் அருகில் சென்ற போது, பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் இருந்த தனியார் தொழிற்சாலையின் சுற்றுச்சுவரை இடித்துக் கொண்டு உள்ளே புகுந்தது. அப்போது பஸ்சில் இருந்த பயணிகள் அலறியடித்தனர். இதில் பஸ் டிரைவர் ஜெயன், கண்டக்டர் சுரேஷ், மற்றும் பயணிகள் விழுப்புரம் சின்ன சேலத்தை சேர்ந்த ராமசாமி (48), வயநாட்டை சேர்ந்த ரகுநாதன் (62), பைசாள் (17) ஆகியோர் படுகாயமடைந்தனர். உடனே அக்கம், பக்கத்தினர் ஓடிவந்து அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பொள்ளாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி, இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். சம்பவம் குறித்து பஸ்சில் இருந்த பயணிகளிடம் விசாரணை நடத்தினர். அப்போது சில பயணிகள், மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் பஸ் மீது கல்வீசி தாக்கினார்கள். இதில் கண்ணாடி துண்டுகள் டிரைவரின் முகத்தில் விழுந்ததால், பஸ் இடதுபுறம் இருந்த பள்ளத்தில் இறங்கியது. டிரைவர் வலதுபுறம் பஸ்சை திருப்பி இருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டு இருக்கும் என்று தெரிவித்தனர்.

பஸ் மீது மர்ம நபர்கள் கல்வீசியதாக தகவல் பரவி பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பாலக்காட்டில் இருந்து வந்த கேரள அரசு பஸ்கள் ஜமீன் முத்தூரில் நிறுத்தப்பட்டது. மேலும் பயணிகளை அங்கேயே இறக்கி விட்டு விட்டு, பஸ்சை திருப்பி கேரளாவுக்கு திருப்பினர்.

பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு சென்ற அந்த மாநில அரசு பஸ்கள் ஒன்றாகவே சேர்ந்து சென்றன. இந்த சம்பவத்தை தொடர்ந்து கேரள அரசு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தாலுகா போலீசார் உடனடியாக துரித விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் டிரைவரின் கவனகுறைவு காரணமாக விபத்து ஏற்பட்டதும், யாரும் கல்வீசி தாக்கவில்லை என்றும் தெரியவந்தது.

இதுகுறித்து துணை சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:- தற்போது நடைபெறும் போராட்டம் கர்நாடகா மாநில அரசுக்கு எதிராக, எனவே கேரள அரசு பஸ் மீது கல்வீசி இருப்பதாக தகவல் கிடைத்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது. பஸ் மீது கல்வீசி இருந்தால் கண்ணாடி துகள்கள் ரோட்டில் விழுந்து இருக்க கூடும். ஆனால் ரோட்டில் கண்ணாடி துகள்கள் எதுவும் இல்லை. மேலும் பஸ்சுக்குள் கற்களும் இல்லை. டிரைவரிடம், அவருக்கு எதிரே அமர்ந்து பயணம் செய்த பயணிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.

டிரைவர் சாலையின் ஓரத்தில் பஸ்சை ஓட்டி வந்து உள்ளார். அப்போது பஸ் ரோட்டை விட்டு, இறங்கியதும் கண்ணாடி உடைந்து அவர் மீது விழுந்து உள்ளது. அதன்பிறகே பள்ளத்தில் பஸ் இறங்கி தொழிற்சாலையின் சுற்றுச்சுவரை உடைத்து உள்ளே புகுந்து உள்ளது. இருப்பினும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கேமராக்களில் விபத்து நடந்த போது யாராவது மோட்டார் சைக்கிள்களில் சந்தேகப்படும்படி சென்றார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story