தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம்: திருப்பூர் மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டன


தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம்: திருப்பூர் மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டன
x
தினத்தந்தி 6 April 2018 4:30 AM IST (Updated: 6 April 2018 1:02 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டன, பஸ்கள் மீது கல்வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர்,

தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நேற்று நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. பஸ்கள் மீது கல்வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் திருப்பூர் மாவட்டம் முழுவதும் நேற்று நடைபெற்றது. தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, பா.ம.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, திராவிடர் கழகம், உழவர் உழைப்பாளர் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, பெருந்தலைவர் மக்கள் கட்சி மற்றும் பொதுநல அமைப்புகள் இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தன. மேலும் தொ.மு.ச., ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ்., எம்.எல்.எப். உள்ளிட்ட தொழிற்சங்கங்களும் முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்றன.

தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் பங்கேற்றதால் பனியன், பஞ்சாலை, விசைத்தறி, சாயப்பட்டறை, பிரிண்டிங் பட்டறை, அரிசி ஆலை தொழிலாளர்கள், தனியார் மோட்டார் வாகன தொழிலாளர்கள், ஆட்டோ, வேன் டிரைவர்கள், பேக்கரி தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களும் முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்றனர்.

முழு அடைப்பு போராட்டத்துக்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை ஆகியவை ஆதரவு தெரிவித்தன. இதன்காரணமாக திருப்பூர் மாநகரில் மளிகை கடைகள், பேக்கரி, ஓட்டல்கள், பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்ட பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மருந்துக்கடைகள் மட்டும் திறந்து இருந்தன.

மாநகரின் இதயப்பகுதியாக உள்ள திருப்பூர் பழைய பஸ் நிலையம் மற்றும் பல்லடம் ரோடு, காங்கேயம் ரோடு, தாராபுரம் ரோடு, மங்கலம் ரோடு, அவினாசி ரோடு, பி.என்.ரோடு, ஊத்துக்குளி ரோடு என அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் புதுமார்க்கெட் வீதியில் உள்ள ஜவுளி கடைகள், நகைக்கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

தினசரி மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டன. பூ மார்க்கெட்டில் கடைகள் செயல்படவில்லை. திருப்பூர் தெற்கு உழவர் சந்தை, வடக்கு உழவர் சந்தைகளுக்கு நேற்று விவசாயிகள் மிக குறைவாக வந்திருந்தனர். இதனால் உழவர் சந்தைகள் செயல்படவில்லை. தென்னம்பாளையம் காய்கறி மார்க்கெட்டில் உள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் மார்க்கெட் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில் சலூன்கள் அனைத்தும் மூடப்பட்டன. எலெக்ட்ரானிக்ஸ், பர்னிச்சர் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்தனர். இதனால் மாவட்ட அளவில் எலெக்ட்ரானிக்ஸ், பர்னிச்சர் கடைகள் அடைக்கப்பட்டன. தனியார் பஸ் மற்றும் ஆட்டோ, வேன் உள்ளிட்ட வாகனங்கள் ஓடவில்லை. இதனால் திருப்பூர் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், ரெயில் நிலையத்துக்கு வந்த பயணிகள் வேறு இடத்துக்கு செல்வதற்கு சிரமம் அடைந்தனர்.

மாநகரில் அரசு பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. திருப்பூர் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் இருந்து அரசு டவுன் பஸ்கள், தொலைதூர பஸ்கள் இயக்கப்பட்டன. ஒரு சில தனியார் பஸ்கள் ஓடின. பஸ் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இதுபோல் மடத்துக்குளம், பல்லடம், காங்கேயம், தாராபுரம், அவினாசி, ஊத்துக்குளி பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. உடுமலையில் தேர்த்திருவிழா நேற்று நடந்ததால் காலையில் கடைகள் திறந்து இருந்தன. மாவட்டம் முழுவதும் நேற்று பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

சோமனூரில் இருந்து திருப்பூர் நோக்கி அரசு டவுன் பஸ் நேற்று காலை வந்து கொண்டிருந்தது. ஆண்டிப்பாளையம் பிரிவு அருகே வந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கற்களை வீசி விட்டு தப்பினார்கள். இதில் பஸ்சின் பக்கவாட்டு கண்ணாடி உடைந்தது. ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும் சோமனூரில் இருந்து திருப்பூருக்கும், அய்யன்கோவிலில் இருந்து திருப்பூர் நோக்கியும் வந்த 2 அரசு டவுன் பஸ்களை ஆண்டிப்பாளையம் பிரிவில் சிலர் நிறுத்தி பயணிகளை கீழே இறக்கி விடுமாறு கூறி டிரைவர், கண்டக்டர்களிடம் தகராறு செய்தனர். அதுபோல் இரண்டு சரக்கு லாரிகளையும் நிறுத்த சொல்லி சிலர் தகராறு செய்தனர். பின்னர் அங்கு போலீசார் சென்று பஸ்களை அனுப்பி வைத்தனர்.

இதுபோல் தாராபுரத்தில் இருந்து பழனி நோக்கி தனியார் பஸ் ஒன்று நேற்று காலை சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் காலை 11 மணிக்கு ஐந்துமுக்கு பகுதியில் வந்த போது அடையாளம் தெரியாத நபர்கள் பஸ் மீது கல்வீசி தாக்கினார்கள். இதில் பஸ் சேதமடைந்தது.

திருப்பூர் செட்டிப்பாளையம் அருகே வந்த ஒரு லாரியின் முன்பக்க கண்ணாடியை மர்ம ஆசாமிகள் கல்வீசி உடைத்து விட்டு தப்பினார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story