காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட 400 பேர் கைது


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட 400 பேர் கைது
x
தினத்தந்தி 6 April 2018 4:30 AM IST (Updated: 6 April 2018 1:13 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டதால் முக்கிய வீதிகள் வெறிச்சோடின. மேலும் ஆங்காங்கே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க. உள்பட அரசியல் கட்சியினர் 400 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர்,

காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சினையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்திற்கு துரோகம் இழைத்துவரும் மத்திய அரசை கண்டித்தும், மத்திய அரசுக்கு துணை போகும் தமிழக அரசை கண்டித்தும் மாநிலம் முழுவதும் ஏப்ரல் 5-ந்தேதி முழுஅடைப்பு போராட்டம் நடத்த தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தன. அதன்பேரில் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று நடந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங் களின் பேரவை பெரம்பலூர் மாவட்ட அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பான வணிகர் நலச்சங்கம் முழுஆதரவு கொடுத்ததால், வியாபாரிகள் முழுமையாக இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். கடைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டிருந்ததால் பெரம்பலூர் நகர் மற்றும் மாவட்டத்தின் முக்கிய வீதிகளில் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச் சோடியது.

அரசு மற்றும் தனியார் பஸ்கள் குறைவான எண்ணிக்கையுடன் இயங்கப்பட்டன. பெரம்பலூரில் புதிய, பழைய பஸ்நிலையம், கடைவீதி, காமராஜர் சிக்னல் உள்பட பல பகுதிகளில் ஒரிரு பெட்டிக்கடைகள், பூக்கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. கடைவீதி தபால் நிலையத்தெரு, பள்ளிவாசல் தெரு, பூசாரித்தெரு ஆகிய பகுதிகளில் ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், மளிகை சாமான்கள் கடைகள், பாத்திரக்கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. பெரம்பலூர் தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகளும் கடைகளை அடைத்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். ஓட்டல்கள், டீக்கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மேலும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த போராட்டம் நடந்தது.

எசனை, வேப்பந்தட்டை, கிருஷ்ணாபுரம், அரும்பாவூர், பூலாம்பாடி, வி.களத்தூர், கைகளத்தூர், நெற்குணம், வாலிகண்டபுரம், எறையூர், லெப்பைக்குடிக்காடு, அகரம்சிகூர், வேப்பூர், குன்னம், மேலமாத்தூர், கொளக்காநத்தம், பாடாலூர், செட்டிகுளம் உள்பட பெரம்பலூர், வேப்பந்தட்டை, குன்னம், ஆலத்தூர் ஆகிய 4 தாலுகா பகுதிகளில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.

பெரம்பலூர் மாவட்டத்தில் மருந்துகடைகள், பூக்கடைகள், பால்பூத்துகள் ஆகியவை திறந்திருந்தன.

ஓரிரு தனியார் பஸ்கள் தவிர பெரும்பாலான பஸ்கள், மினி பஸ்கள் இயங்கவில்லை. ஆனால் அரசு பஸ்கள் குறைவான எண்ணிக்கையில் இயக்கப்பட்டன. மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், வங்கிகள், காப்பீடு நிறு வனங்கள் வழக்கம்போல இயங்கின. லாரி, வேன், கார், ஆட்டோ, ஷேர் ஆட்டோ, பயணிகள் வாகனங்களின் உரிமையாளர்கள், வாகன தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்டத்தின் பிரதான வருவாய் ஈட்டித்தரும் கல்குவாரிகள், கிரசர் ஆலைகள் மூடப்பட்டிருந்தன. சிட்கோ தொழிற்பேட்டையில் தொழில்கூடங்கள் அடைக்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் சிறு, குறு, மிகச்சிறு தொழிற்கூடங்கள் மூடப்பட்டிருந்தன. இந்த போராட்டம் காரணமாக பெரம்பலூரில் சாலைகள் வெறிச்சோடி கிடந்தன.

இதற்கிடையே பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. சார்பில் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பெரம்பலூர் புதிய பஸ்நிலையம், காமராஜர் வளைவு, செஞ்சேரி, நான்குரோடு உள்ளிட்ட பகுதிகளில் தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டம் நடத்தி மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் மாவட்ட தி.மு.க. செயலாளர் குன்னம் ராஜேந்திரன், நகர செயலாளர் பிரபாகரன் உள்பட தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர்.

இதே போல் பெரம்பலூர் மாவட்ட இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர், ம.தி.மு.க. கட்சியினர் ஆகியோர் சேர்ந்து பெரம்பலூர் புதிய பஸ்நிலையத்தினுள் அமர்ந்து அரசு பஸ்களை வெளியே எடுக்கமுடியாதபடி தரையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். அங்கிருந்த போலீசார் உடனடியாக அவர்களை கைது செய்தனர்.

பெரம்பலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி யினர் மத்திய அரசை கண்டித்து, புதிய பஸ்நிலையம் அருகே வந்து கொண்டிருந்த அரசு பஸ்சை சிறைபிடித்து அதன் முன்பு படுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர் களையும் போலீசார் கைது செய்தனர். இதே போல் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய தோழமை கட்சிகளும் பங்கேற்றனர். சாலை மறியல் போராட்டம் நடத்தியதாக தி.மு.க. உள்பட அரசியல் கட்சியினர் 400 பேரை கைது செய்து அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

முழுஅடைப்பு போராட்டத்தையொட்டி பெரம்பலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஞானசிவக் குமார் மேற்பார்வையில் சுமார் 300 போலீசார் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பெரம்பலூரில் நடந்த போராட்டத்தில் கோடிக் கணக்கில் வர்த்தகம், வணிகம் பாதிக்கப்பட்டது. ஆனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. 

Next Story