கோவில் அர்ச்சகர் மனைவி படுகொலை; நகை கொள்ளை


கோவில் அர்ச்சகர் மனைவி படுகொலை; நகை கொள்ளை
x
தினத்தந்தி 6 April 2018 5:30 AM IST (Updated: 6 April 2018 1:34 AM IST)
t-max-icont-min-icon

வடபழனியில் கை, கால்களை கட்டி இளம்பெண்ணை கொன்று நகை கொள்ளையடிக்கப்பட்டது. காயம் அடைந்த அவரது கணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கோயம்பேடு,

சென்னை வடபழனி தெற்கு சிவன் கோவில் தெருவில் வசித்து வருபவர் பிரபு(வயது 27). இவர், வடபழனி முருகன் கோவிலில் தற்காலிக அர்ச்சகராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி பிரியா(24). இவர், காஞ்சீபுரத்தைச் சேர்ந்தவர்.

இவர்கள், கடந்த 3 வருடங்களாக இந்த பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குழந்தை இல்லை. இதற்காக அண்ணாநகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நேற்று முன்தினம் மாலை கணவன்-மனைவி இருவரும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று வந்துள்ளனர்.

இந்தநிலையில் நேற்று காலை வீட்டுக்கு வெளியே உள்ள கழிவறையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிரபு, மயங்கி கிடந்தார். அவரது உடலில் லேசான காயங்கள் இருந்தது. இதை பார்த்த வீட்டின் உரிமையாளர் விஜயலட்சுமி அதிர்ச்சி அடைந்தார்.

அப்போது அவரது வீட்டின் கதவு பூட்டப்படாமல் சாத்தப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர், பிரியா என்று அழைத்தபடியே கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தார்.

வீட்டின் உள்ளே பிரியா, ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவரது கை, கால்கள் கயிறால் கட்டப்பட்டு இருந்தது. தலை மற்றும் உடலில் காயங்கள் காணப்பட்டது. வீட்டில் உள்ள பொருட்கள் அங்கும் இங்குமாக சிதறிக்கிடந்தது.

இதுபற்றி உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வடபழனி போலீசார் விரைந்து சென்றனர். அவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து பிரியாவை பரிசோதித்து பார்த்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பிரியா கழுத்தில் அணிந்து இருந்த சுமார் 3 பவுன் தங்க சங்கிலி மாயமாகி இருந்தது. எனவே நகைக்காக அவர் கொலை செய்யப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

நேற்று முன்தினம் இரவு கொள்ளையர்கள், அவரது வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடிக்க முயன்று உள்ளனர். அதை தடுத்ததால் பிரபுவை தாக்கி அவரது கை, கால்களை கட்டி கழிவறைக்குள் போட்டு விட்டு, பிரியாவையும் கை, கால்களை கட்டி அடித்துக்கொலை செய்து விட்டு அவர் அணிந்து இருந்த நகையை கொள்ளையடித்து சென்று இருக்கலாம் என சந்தேகிப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

கொலையான பிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயபேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காயங்களுடன் மயங்கி கிடந்த பிரபுவுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தபோது, அவருக்கு வலிப்பு வந்து மீண்டும் மயங்கி சுயநினைவை இழந்தார்.

அவரையும் சிகிச்சைக்காக அதே மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள், கைரேகை நிபுணர்கள் தடயங்களையும், கைரேகைகளையும் சேகரித்தனர். சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து 100 அடி சாலைவரை ஓடி நின்று விட்டது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

இதுபற்றி வடபழனி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்துரு வழக்குப்பதிவு செய்து பிரபு வீட்டுக்குள் கொள்ளையர்கள் எப்படி புகுந்தனர்?. பிரபுவை எதற்காக கழிவறையில் கட்டிப்போட்டார்கள்?, இது திட்டமிட்டு நடந்த கொள்ளையா? அருகருகே வீடுகள் உள்ள நிலையில் சத்தமில்லாமல் கொடூர கொலை, கொள்ளை சம்பவம் எப்படி நடந்தது? என அடுக்கடுக்கான கேள்விகளுடன், பிரபு, பிரியா தம்பதியரின் நடவடிக்கைகள் குறித்தும் ரகசியமாக விசாரணை நடத்தி வருகிறார்.

பிரபு சுயநினைவை இழந்து விட்டதால் அவரிடம் தற்போது நடந்த சம்பவங்கள் குறித்து விசாரிக்க முடியவில்லை. நினைவு திரும்பியவுடன் அவரிடம் விசாரித்தால்தான் பிரியா நகைக்காக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது உள்ளிட்ட இந்த கேள்விகளுக்கு விடை தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

வடபழனி போலீஸ் நிலையத்தின் அருகே உள்ள வீட்டில் நடந்த இந்த கொடூர கொலை, கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story