திருப்பூரில் பனியன் நிறுவனங்கள் மூடப்பட்டன - ரூ.125 கோடி பின்னலாடை வர்த்தகம் பாதிப்பு


திருப்பூரில் பனியன் நிறுவனங்கள் மூடப்பட்டன - ரூ.125 கோடி பின்னலாடை வர்த்தகம் பாதிப்பு
x
தினத்தந்தி 6 April 2018 5:00 AM IST (Updated: 6 April 2018 1:37 AM IST)
t-max-icont-min-icon

முழு அடைப்பு போராட்டம் காரணமாக திருப்பூரில் பனியன் நிறுவனங்கள் மூடப்பட்டன.இதனால் ரூ.125 கோடிக்கு பின்னலாடை வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

திருப்பூர்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நேற்று திருப்பூரில் நடைபெற்றது.

இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு பனியன் தொழில்துறையினரும் ஆதரவு தெரிவித்தனர். இதனால் நேற்று திருப்பூரில் உள்ள 95 சதவீதம் பின்னலாடை நிறுவனங்கள் செயல்படவில்லை.

உள்நாட்டு பனியன் உற்பத்தி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள், நிட்டிங், சாயப்பட்டறை, பிரிண்டிங், எம்பிராய்டரிங், பவர் டேபிள் நிறுவனங்கள் உள்ளிட்ட ஜாப்ஒர்க் நிறுவனங்கள் என 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன.

இந்த நிறுவனங்களில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். பனியன் தொழில் நிறுவனங்களில் வேலைநிறுத்தம் காரணமாக தொழிலாளர்கள் வேலை இழந்தனர். ஒரு சில நிறுவனங்கள் மட்டும் செயல்பட்டன. அந்த நிறுவனங்களிலும் 40 சதவீதத்துக்கும் குறைவாக தொழிலாளர்கள் பணியாற்றினர்.

பின்னலாடை நிறுவனங்கள் மூடப்பட்டதால் மாநகரில் தொழிலாளர்கள் நடமாட்டம் இல்லாமல் காணப்பட்டது. உள்நாட்டு ஆடைகள் உற்பத்தி, ஏற்றுமதி ஆடைகள் உற்பத்தி, ஜாப்ஒர்க் பணிகள் ஆகியவை முடங்கியதால் நேற்று ஒருநாள் மட்டும் ரூ.125 கோடிக்கு பின்னலாடை வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக தொழில்துறையினர் தெரிவித்தனர்.

Next Story