மேல்மலையனூர் அருகே பயங்கரம்: கத்தியால் குத்தி மனைவி கொலை


மேல்மலையனூர் அருகே பயங்கரம்: கத்தியால் குத்தி மனைவி கொலை
x
தினத்தந்தி 6 April 2018 3:30 AM IST (Updated: 6 April 2018 2:57 AM IST)
t-max-icont-min-icon

மேல்மலையனூர் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த விவசாயியை போலீசார் கைது செய்தனர்.

மேல்மலையனூர்,

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ள மானந்தல் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி மகன் இளையராஜா(வயது 32). விவசாயி. இவரது மனைவி சித்ரா(30). இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. மகாலட்சுமி(13), தேவராஜி(11) என்று இரு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் சித்ராவின் நடத்தையில் இளையராஜாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் கடந்த ஆண்டு ஏற்பட்ட தகராறின் போது, சித்ரா தனது கணவரை விட்டு பிரிந்து கொடம்பாடி கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் நேற்று மதியம் இளையராஜா, சித்ராவை தன்னுடன் அழைத்து வருவதற்காக கொடம்பாடிக்கு சென்றார். அப்போது, தனது தாய் வீட்டில் இருந்து வரமாட்டேன் என்று சித்ரா கூறியுள்ளார்.

இதனால் இவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த இளையராஜா தான் வைத்திருந்த கத்தியால் சித்ராவின் வயிற்றில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த சித்ரா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். மனைவியை கொலை செய்த இளையராஜா செய்வதறியாமல் அங்கேயே நின்று கொண்டு இருந்தார். இதற்கிடையே சம்பவம் பற்றி அறிந்த அவலூர்பேட்டை போலீசார் விரைந்து வந்து சித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இளையராஜாவை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story